கான்பூர்: கான்பூர் கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்படும் என்று உத்தர பிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதுபோன்ற நிலையில், கான்பூரில் உள்ள பரேட், நை சதக் மற்றும் யதீம்கானா பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில், 20 காவலர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது குறித்து ஏடிஜிபி பிரசாந்த் குமார் நேற்று கூறுகையில், ‘வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரையில் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் விசாரணை வளையத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி நிலவுகிறது. நாங்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றவாளிகளின் சட்ட விரோத சொத்துகள் இடித்து தள்ளப்படும்,’’ என்றார்.