பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்வதற்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்த பயணிகளில் பெரும்பாலானோர் இணைப்பு விமானத்துக்கு செல்லும் வழி, குடிநீர் இருக்கும் இடம், கழிவறை உள்ள பகுதி, பொருட்களை வைக்கும் இடம், சோதனை செய்யும் இடம் ஆகியவை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் புதிய பயணிகளுக்கு கடும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து விமான நிலையத்தின் மூத்த அதிகாரி சம்ப்ரீத் சதானன் கூறுகையில், ‘பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இவைகளுக்கு ‘ஸ்கை’ மற்றும் ‘டெமி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ரோபாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பயணிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கும். மேலும் பயணிகளை அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்.
இதற்கு கிராமப்புற பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது சோதனையில் ரோபோக்கள் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் ரோபோக்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.