சென்னை அரசுக் கல்லூரியை அரசு கையகப்படுத்த கம்யூனிஸ்ட் கோரிக்கை

சென்னை

சென்னையில் உள்ள டி பி ஜெயின் கல்லூரியைத் தமிழக அரசு கையகப்படுத்த கம்யூனிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் கே பாலகிருஷ்ணன் நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  

அந்தக் கடிதத்தில் அவர்,

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரி கடந்த 50 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பிரிவில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிடப் பல மடங்கு உயர்த்தி, சுயநிதி பிரிவுக்கு இணையான கட்டணத்தை வசூலிக்கிறது. கடந்த2020-21 முதல் அரசு உதவி பெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பிரிவில், பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதையும் நிறுத்திவிட்டது. இதுபோல, அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்த 11 பேராசிரியர்களை 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாகப் பணி நீக்கம் செய்துள்ளது.

அரசின் அனைத்து உதவிகளையும் பெற்று கல்வி நிறுவனம் தொடங்கி, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொண்டு அதை அப்படியே சுயநிதி கல்லூரியாகவே மாற்றிச் செயல்படுத்தி வருகிறது. அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதால் அரசு உதவி பெறும் பாடப் பிரிவுகளில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் சேர முடியவில்லை.

எனவே, தாங்கள் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியைத் தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976-ன் 14 (அ) பிரிவைப் பயன்படுத்தி, ஒரு தனி அலுவலரை நியமித்து, அரசின் கட்டுப்பாட்டில் கையகப்படுத்தி தமிழக அரசே இக்கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும்

மேலும், இதுபோன்று தமிழகம் முழுவதும் இயங்கும் 250 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் அரசின் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுகிறதா, அரசு நிர்ணயித்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் வேண்டும். ”

எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.