புதுடெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப் சேமிப்புக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டுக்கு 8.1 சதவீத வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பிஎப் வட்டி விகிதம் 1977-78-ம் நிதி ஆண்டில் 8 சதவீதமாக இருந்தது. தற்போது அதே நிலைக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இபிஎப் அமைப்பு ஓய்வூதிய சேமிப்பு மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது. இதனால் 6.4 கோடி ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டனர்.
வட்டிக் குறைப்பு பரிந்துரைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சேமிப்புதாரர்களுக்கு வட்டி அளித்தது போக நிதியத்திடம் உபரியாக ரூ. 450 கோடி நிதி இருக்கும் என்று தெரிகிறது.
இபிஎப்ஓ அமைப்பிடம் உள்ள வருமான அளவான ரூ. 76,768 கோடி தொகையாகும். அதாவது வட்டி வருவாய் 7.9 சதவீத அளவிலேயே உள்ளது என்று கடந்த மார்ச் மாதமே குவஹாட்டியில் நடைபெற்ற இபிஎப்ஓ கூட்டத்தில் மத்திய தொழிலாளர்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் குறிப்பிட்டிருந்தார்.
2013 – 14-ல் அதிகபட்சம்
2019-20-ம் நிதி ஆண்டில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. முன்னர் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2015-16-ம் நிதி ஆண்டில் 8.80 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து 2013-14-ம் நிதி ஆண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்ததே அதிகபட்ச வட்டி விகிதமாகும். 2011-12-ம் நிதி ஆண்டில் மிகவும் குறைந்த அளவாக 8.25 சதவீதம் இருந்தது.
பிஎப் வட்டி குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து மக்களின் வருவாய் குறையும் வழிமுறையைக் கையாள்கிறார். இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் இப்போதைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். இது 6.5 கோடி ஊழியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார். லோக் கல்யாண் மார்க் வீட்டிலிருந்து மக்களுக்கு எவ்வித நலனும் கிடைக்காது” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் 7, ரேஸ் கோர்ஸ் சாலை இது 7 லோக் கல்யாண் மார்க் என 2016-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.