Three kids die of suffocation inside parked, பணகுடி அருகே காருக்குள் விளையாடிய குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு நித்திஷா என்ற 6 வயது மகளும், நித்திஷ் என்ற 4 வயது மகனும் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளும் பகத்துவீட்டில் வசிக்கும் சுதன் என்பவரின் 4 வயது மகன் கபி சாந்தும் தினமும் ஒன்றாக விளையாடுவது வழக்கம்.
நாகராஜனின் அண்ணன் மகன் மணிகண்டனின் கார் எப்போதும் இவர்களது வீடருகேதான் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில்தான் வழக்கமாக குழந்தைகள் விளையாடுவதாகவும் கூறப்படுகிறது. காரில் ஏற்பட்ட சிறு பழுதால் காரின் கதவுகளை வெளியிலிருந்து மட்டுமே திறக்க முடியும் என்று காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 3 குழந்தைகள் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். எதிர்பாராதவிதமாக காரின் கதவு மூடப்பட்டது. வெகு நேரமாக காருக்குள் விளையாடிய குழந்தைகள் வெளியே வர முயற்சித்தபோதும் முடிவில்லை. வெயிலின் தாக்கம் அதிகமானதாலும், காற்றோட்டம் இல்லாததாலும் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகளை வெகு நேரமாகியும் காணவில்லை என்று பெற்றோர்கள் தேடியுள்ளனர். இதைத்தொடர்ந்து காருக்குள் மயங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 3 குழந்தைகளையும் பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகள் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சபாநாயகர் அப்பாவுவின் சொந்த ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், பணகுடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சபாநாயகர் அப்பாவு பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.