கமல் விரும்பிய இலக்கியவாதி; பாலகுமாரனின் ‘முழு ஸ்நேகிதன்’ – எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் தெரியுமா?

சுப்ரமண்ய ராஜு. இந்தத் தலைமுறை இளம் வாசகர்கள் அதிகம் அறிந்திருக்காத ஒரு பெயர்; ஆனால், அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெயர். ‘காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு 25 சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதை ஒன்று’ என்று சுஜாதா ‘கணையாழி’யில் எழுதியது ராஜுவின் கதைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ‘நவீன வாழ்க்கை முறை இளைஞர்களை எவ்வாறு கட்டமைக்கிறது என்பது குறித்த அவர் கதைகள் முக்கியமானவை. நுட்பம் சார்ந்த எழுத்து அவருடையது’ என்று ராஜுவின் கதைகள் மதிப்பிடுகிறார் பிரபஞ்சன்.

சுப்ரமண்ய ராஜு

சுப்ரமண்ய ராஜு வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். ஆனால், ஒரு தலைமுறையையே பெரிதாக பாதித்த எழுத்தாளர் அவர். நவீனக் கவிதைகள்மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் நுழைந்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘இன்று நிஜம்’ என்ற ஒரு தொகுப்பு மட்டும்தான் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியானது. கிழக்கு பதிப்பகம், அவரது கதைகளைத் தொகுத்து ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ என்ற பெயரில் 2006-ல் வெளியிட்டது. 32 கதைகளாக 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்புக்கு ராஜுவின் நெருங்கிய நண்பர் தேவகோட்டை வா.மூர்த்தி எழுதியிருக்கும் முன்னுரை தமிழின் முக்கியமான முன்னுரைகளில் ஒன்று. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நிகழ்ந்த ஒரு மோசமான சாலை விபத்தில் ராஜு அகால மரணமடைந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே. ராஜுவின் பிறந்தநாளான இன்று; அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் ராஜுவின் மனைவி பாரதி.

“என் அப்பா து.ராமமூர்த்தி, அம்மா சரோஜா ராமமூர்த்தி இருவருமே எழுத்தாளர்கள். இருவரும் ஒரே ஊரில் இருந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை. அப்போது ‘ஆனந்த விகட’னில் இருந்த கல்கி, ‘உங்கள் ஊரிலிருந்து சரோஜா என்பவர் எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று அப்பாவிடம் கூறியிருக்கிறார். அதன்பிறகு தான் ஒருவரை ஒருவர் அறிந்து காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்,” என்று பேசத் தொடங்குகிறார் பாரதி.

“நாங்கள் ஆதம்பாக்கத்தில் வசித்துவந்தோம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் தான் ராஜுவின் வீடும் இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே எங்கள் குடும்பமும் அவர்கள் குடும்பமும் நன்றாகப் பழகிவந்தோம். சினிமா இயக்குநரான என் அண்ணன் ஜெயபாரதியும் ராஜுவும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். பள்ளி, கல்லூரி ஒன்றாகப் படித்து சுந்தரம் கிளெய்டன் நிறுவனத்தில் ஒன்றாகப் பணிக்குச் சேர்ந்தது என அவர்கள் நட்பு தொடர்ந்துவந்தது.

சில காலம் கழித்து, என் அண்ணா சினிமாவுக்குப் போகிறேன் என்று சொல்லி திடீரென்று வேலையை விட்டுவிட்டார். சுந்தரம் கிளெய்டனுக்குப் பிறகு, ராஜு டிடிகே நிறுவனத்துக்கு மாறினார். என் இன்னொரு அண்ணா ரவீந்திரனின் ’உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ கதைகளை ஜெயபாரதி திரைப்படமாக இயக்கினார்.

சுப்ரமண்ய ராஜு – பாரதி

ராஜுவும் நானும் ஆரம்பத்தில் நண்பர்களாகவே பழகிவந்தோம். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். ஒரு கட்டத்துக்குப் பிறகு நட்பு காதலாக மாறியது. அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவர் என்ன நினைக்கிறார் என்பதை நான் கண்டுகொண்டேன். அந்தச் சமயத்தில் எனக்குத் தென்னக ரயில்வேயில் வேலை கிடைத்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று நானே சொன்னேன். இரண்டு குடும்பங்களும் நீண்ட நாள் நட்பு உண்டு என்றாலும், என் அப்பா ராஜுவை ஏற்றுக் கொள்வாரா என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், எங்கள் காதல் வீட்டுக்குத் தெரிந்தது, நான் ராஜுவைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப்போகிறேன் என்பதை இரு வீட்டாரும் ஏற்றிருந்தனர். அந்தச் சமயத்தில்தான் எதிர்பாராதவிதமாக ராஜுவின் அம்மா திடீரென்று இறந்துபோனார். எல்லோருக்குமே அது பெரிய அதிர்ச்சி. இந்த நிலையில், வீட்டில் ஒரு சுபகாரியம் நடக்க வேண்டும் என்று முடிவுசெய்தபோது எங்கள் திருமணம் நடந்தது. சுவாமி மலையில் நடந்த எங்கள் திருமணத்துக்கு அவருடைய இலக்கிய நண்பர்கள் பலர் வந்திருந்தனர்,” என்று அந்தக் காலகட்டத்தை நினைவுகூர்கிறார்.

“ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ராஜு எழுத உட்காருவார். என் வாழ்வில் நான் பார்த்த மிக அழகான கையெழுத்து ராஜுவுடையதுதான். அச்சடித்த மாதிரி அத்தனை அழகாக இருக்கும் கையெழுத்தை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். திருமணத்துக்கு முன்பு கவிதைகள்தான் நிறைய எழுதியிருக்கிறார். அவர் கதைகளைவிட கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்; அவர் கவிதையில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது என் எண்ணம். அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான ‘இன்று நிஜம்’ தொகுப்புகுத் தமிழக அரசின் விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்தார். சிறந்த சிறுகதையாசிரியர்களின் பட்டியலில் ராஜுவின் பெயரைக் குறிப்பிட்டு சுஜாதா ‘கணையாழி’யில் எழுதியிருந்தார்,” பெருமை நிறைந்து பேசுகிறார்.

ராஜு படைப்புகளின் இயங்குதளம் என்பது நகரமும் அது சார்ந்த வாழ்க்கையும். 1970களில் சென்னை மாநகரின் நடுத்தர வர்க்கத்தின் நெருக்கடிகளை, அவற்றின் அக உலகை ராஜு தன் கதைகளில் கையாண்டார், விசாரணை செய்தார்.

சுப்ரமண்ய ராஜு கதைகள்

“அவருக்கு எல்லோருமே நண்பர்கள்தான். பாலகுமாரன், மாலன் ஆகியோருடன் மிக ஆழமான நட்பிருந்தது. ‘நாயகன்’ படம் முதல் காட்சியில் திரையில் பாலகுமாரன் பெயர் வந்தபோது எங்களைக் கைதட்டச் சொல்லி உற்சாகப்படுத்தினார். தன் நண்பனைப் பற்றி அத்தனை பெருமை அவருக்கு. அதே போல் பாலகுமாரனின் முதல் ஸ்நேகிதனாக ராஜு இருந்தார். கமல்ஹாசனுக்கு ராஜுவை மிகவும் பிடிக்கும். ரஷ்ய கலாச்சார மையம் அமைந்திருக்கும் சாலை வழியாகத்தான் ராஜு அலுவலகம் செல்வார். முன்பு அங்கு குடியிருந்த கமல் காலை வேளைகளில் ராஜுவைப் பார்க்க நேரும்போது இருவரும் சந்தித்துக்கொண்டதை மாலையில் வீடு திரும்பியதும் ராஜு சொல்வார். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமல் தன்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கு சுப்ரமண்ய ராஜு என்று பெயரிட்டது ராஜுவின் நினைவாகத்தான். வாரம் தவறாமல் சந்தித்துவிடக் கூடிய நண்பர்களாக தேவகோட்டை வா.மூர்த்தியும் ராஜுவிம் விளங்கினர். ராஜுவுக்கு எல்லோருமே நண்பர்கள்தான்,” என்கிறார்.

மாலன், ராஜு, பாலகுமாரன்

“குழந்தைகள் மேல் அவருக்கு அளவு கடந்த பிரியம் உண்டு. நானே அப்புறம்தான். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு பேரையும் மோட்டர் பைக்கில் மார்க்கெட்டுக்கு கூட்டிச் செல்வார். பக்கத்து வீட்டிலிருந்த பையன்கள் எல்லோரும் ‘ராஜு மாமா’ என்று மிகுந்த பிரியமுடன் இருப்பார்கள். அவர்களோடு கிரிக்கெட், செஸ், கேரம் எல்லாம் விளையாடுவார். விளையாட்டுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார். ராஜு தன் வாழ்வில் எத்தனையோ மாணவர்களைப் படிக்க வைத்திருக்கிறார். பணமாகவும், பொருளாகவும் உதவிக் கொண்டே இருந்தார். ராஜு பற்றி எனக்குப் பெருமையும், நிறைவும் அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று,” என்கிறார் பாரதி.

சுப்ரமணய ராஜு மனைவி குழந்தைகளுடன்

“1987. அந்த ஆண்டு நல்ல மழை. ராஜு மோட்டர் பைக்கில் தான் அலுவலகம் சென்றுவருவார். அலுவலகத்தில் அவருக்கு கார் கொடுத்திருந்தார்கள். இரவு தாமதமாகிவிட்டால் காரில் வருவார். எங்களால் மறக்கமுடியாத நாளான டிசம்பர் 10. சர்வீசுக்கு விட்டிருந்த மோட்டர் பைக் மாலையில் திரும்பிவந்திருக்கிறது. பணிமுடிந்து கிளம்பிய ராஜு, மழை வருவதைப் போல் இருப்பதைக் கண்டு காரில் செல்லலாமா என யோசித்திருக்கக் கூடும். ஆனால், காலையில் ரயிலில் தான் வரமுடியும் என்பதால் வண்டியிலேயே வீட்டுக்கு வந்துவிட நினைத்திருப்பார். அப்படி வண்டியில் நந்தனம் சிக்னலை நெருங்கும்போது, சிக்னலுக்காக வண்டியை நிறுத்தியவர் மீது பின்னால் வந்த பஸ் மோதிவிட்டது. ராஜு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவருடைய கைக்கடிகாரம் 8.10 மணியில் நின்றுவிட்டது. ராஜுவின் மறைவு மிகப் பெரிய வெற்றிடத்தை உண்டு பண்ணிவிட்டது. துயர் மிகுந்த அந்த நாட்களில் எங்கள் குடும்பத்தினரும், ராஜுவின் குடும்பத்தினரும் என்னையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டனர். இன்றுவரை என்னுடைய இரண்டு சகோதரிகளும் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கின்றனர். ராஜுவிடம் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்த மாலன், இன்றுவரை ஒரு சகோதரனைப் போல் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்” என்கிறார் பாரதி.

“ராஜுவின் நினைவாக அவருடைய இலக்கிய நண்பர்கள் சேர்ந்து ‘அன்புடன்’ என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்கள். அதை வெளியிட்டவர் கமல்ஹாசன். “எனக்கு இலக்கிய நண்பர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், சினிமா சார்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர் சுப்ரமண்ய ராஜு மட்டும்தான்” என்று அப்போது அவர் சொன்னார். ராஜுவின் கதைகளை இப்போது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சாகித்திய அகாதமிக்காக சா.கந்தசாமி தொகுத்த ‘தமிழில் ரயில் கதைகள்’ தொகுப்பில் ராஜுவின் ‘இருட்டில் நின்ற’ தொகுப்பு இடம்பெற்றிருக்கிறது.

பிரபஞ்சன் அடிக்கடி வீட்டுக்கு வந்து ராஜுவுடன் பேசிக் கொண்டிருப்பார். ராஜு இறப்பதற்கு 6, 7 மாதங்களுக்கு முன்பு ஒருமுறை வந்திருந்த பிரபஞ்சனிடன், ராஜு தான் எழுதும் பார்க்கர் பேனாவைத் தந்துவிட்டார். பிரபஞ்சனுக்கு அதிர்ச்சி. ‘ஒரு எழுத்தாளனுக்குப் பேனா என்பது அவருடைய மூளையைவிடப் பெரிய விஷயம், அதைக் கொடுக்கக் கூடிய மனம் இருந்த ஒரே எழுத்தாளர் ராஜுதான்’ என்று பின்னாளில் பிரபஞ்சன் எழுதினார். ராஜு பேனாவைக் கொடுத்தது எனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், தான் அதிக காலம் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்று அவர் இறந்தபிறகு இந்தச் சம்பவத்தை நினைத்து நான் யோசித்தேன்,” என்று மௌனத்தில் ஆழ்கிறார் பாரதி.

சுப்ரமண்ய ராஜு கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஓவியம்

ராஜுவின் கதைகளுக்கு எழுதிய முன்னுரையை இப்படி முடித்திருப்பார் தேவகோட்டை வா.மூர்த்தி: “வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல என்பது ராஜு அடிக்கடிக் குறிப்பிட்ட இன்னொரு நியதி. ஆனால் அந்த நியதியை உடைத்தெறிந்த முதல் ஆளும் அவனே. சுப்ரமண்ய ராஜு எல்லா விதத்திலும் வித்தியாசமானவன். அதனாலேயே விசேஷமானவன்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.