கும்பகோணம்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 10 சிலைகளையும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஒப்படைத்தார்.
இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் அந்த சிலைகளை டெல்லியில் இருந்து ரயில் மூலமாக நேற்று சென்னை கொண்டுவந்தனர். பின்னர், அவை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளை வரும் 6-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைக்க உள்ளனர்.
எந்த கோயில் சிலைகள்?
தென்காசி மாவட்டம் அத்தாள மூன்றீஸ்வரர் கோயிலின் 2 துவார பாலகர் சிலை, தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் நடராஜர் சிலை, நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர்கோயில் கங்காளமூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலை, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லிவரதராஜ பெருமாள் கோயில் விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில்சிவன் பார்வதி சிலை, நாகை சாயாவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் சிலை, அடையாளம் தெரியாத நடனமிடும் சம்பந்தர் சிலை ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.