உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையால் பல்வேறு நாடுகளில் நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து வருவதால், தொழிற்சாலைகள், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், காடுகளின் நிலப்பரப்பு குறைந்து, கரியமில வாயு வெளியேற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதிகரித்து வரும் புவியின் வெப்பநிலை மாற்றத்தால், அதீத வானிலை மாற்றம், துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்டவை ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும், புவி வெப்பநிலை மாற்றத்தின் பாதிப்பை சமீபகாலமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம்.
முன்பெல்லாம், 30 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அதீத கனமழை பெய்யும். ஆனால், இந்த நிலை தற்போது மாறிவிட்டது. அதன்படி, மும்பை, டெல்லி, சென்னை போன்ற இடங்களில், ஒவ்வோர் ஆண்டும் கனமழை பெய்வதும், ஏரியைப்போல் மழைநீர் தேங்குவதும், மக்கள் அவதிப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, 2015-ல் நிகழ்ந்த பெருவெள்ளத்துக்குப் பிறகு, தற்போது மீண்டும் அதீத வானிலை மாற்றத்தை நாம் பார்க்க முடிகிறது. இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப நிலையின் அளவு புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கான, புள்ளிவிவரத்தை, ஐ.எம்.டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தரவுகள்படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இது, கடந்த 12 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிகமாகும். இதுபோன்ற, வெப்ப நிலையின் பாதிப்பு, வரும் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மக்கள் தங்களது தேவையின் காரணமாகப் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். இதனால், மும்பை, டெல்லி, சென்னை போன்ற மாநகரங்களில் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மற்றொருபுறம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளும் அதிகரித்து வருகின்றன. காடுகளின் அளவும் குறைந்து வருவதால், புவியில் தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்படுவதால், அதீத கனமழை, மோசமான வெள்ளங்கள், கடும் வெப்பநிலை, பலத்த காற்றுபோன்ற இயற்கை பேரிடர்கள் வரும் ஆண்டுகளில் அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகப் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர்.
மேலுர் வல்லுநர்கள் கூறுகையில், “பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, மரபுசாரா எரிசக்தி, சுரங்க நீர்த்தேக்கம், நீர்வழிப் போக்குவரத்து போன்ற தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். காற்றாலை, சோலார், கடலோர காற்றாலை, நீர் மின்உற்பத்தி திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அனல் மின் உற்பத்தியைப் படிபடியாகக் குறைக்க வேண்டும்.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். ஒரே இடங்களில் தொழிற்சாலைகள், மக்கள் தொகை குவிவதை தடுக்க வேண்டும். இதெல்லாம், உடனடியாகச் செய்யா விட்டாலும, தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தினால் மட்டுமே, இனி வரும் காலங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவுக்காவது குறைக்க முடியும்’’ என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நன்றி: https://www.indiaspend.com/
– தமிழில்: சவீதா