மனிதன் தன்னுடைய போக்குவரத்து வசதிக்காக மலைகளை குடைந்தும், காடுகளை அழித்தும் பாதையை வடிவமைத்ததில் அதிகம் பாதிக்கப்பட்டது, வன விலங்குகள் தான். காடுகள் பிளக்கப்பட்டு பாதைகள் அமைக்கப்பட்டது. இதனால் மனிதன் வேகமாக வாகனம் ஒட்டி செல்லும் போது விலங்குகள் பாதையை கடக்க முடியாமல் திணறியது, சில விலங்குகள் விபத்தில் சிக்கி இறந்தது. எனவே சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்கவும், மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே ஏற்படும் மோதலை தவிர்க்கவும், வன உயிரினங்கள் கடந்து செல்ல மதுரை மற்றும் திண்டுக்கல் எல்லையை ஒட்டிய வாயுதமலை பகுதியில், வாடிப்பட்டி – தாமரைப்பட்டி நெடுஞ்சாலையில் மேம்பாலம் ஒன்றை கட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் வனவிலங்குகளுக்கான மேம்பாலத்தை அமைப்பதற்கான ஆய்வுகள் முடிவடைந்துள்ளது. இந்த திட்டம் சுமார் 12 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்த மேம்பாலத்தின் மேல் மணல், மரம், புற்கள் அமைக்கப்பட்டு இயற்கையான தோற்றம் உருவாக்கப்படும். இந்த மேம்பாலம் அடுத்த ஆறு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.