ஐதராபாத்தில் காரிலேயே சுற்றி வந்து சிறுமியை கடத்தி பலாத்காரம் சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது: ஆதாரங்களை வெளியிட்ட பாஜ நிர்வாகி

திருமலை: ஐதராபாத்தில் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான ஆதாரங்களை பாஜ நிர்வாகி வெளியிட்டார். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்  ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல ‘பப்’ உள்ளது. இந்த பப்பிற்கு தனது நண்பர் ஹாடிவுடன் கடந்த மாதம் 28ம் தேதி 17 வயது சிறுமி சென்றார். பின்னர், சிறுமி அங்கிருந்து வெளியே வந்தார். பப்பில் இருந்து பின் தொடர்ந்த இளைஞர்கள் பென்ஸ் காரில் வலுகட்டாயமாக சிறுமியை ஏற்றி ஜூப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் காரில் சுற்றியபடி ஒன்றரை மணி நேரம் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், வேறு காரில் சிறுமியை ஏற்றி பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இறக்கி விட்டு சென்றனர். வீடு திரும்பிய சிறுமி தனது பெற்றோரிடம் உடலில் உள்ள காயங்களை காண்பித்து நடந்த சம்பவங்களை பற்றி கூறினார். இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று 5 பேர் மீது போக்சோ, நிர்பயா சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆதாரமாக வைத்து 5 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில், புப்பல்குடா பகுதியை சேர்ந்த சதுதின் மாலிக் (18) (வக்போர்டு தலைவர் மகன்), ஒமர்கான் (18) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், நேற்று பெங்களூர் மற்றும் தமிழகத்தில் தலைமறைவாக இருந்த 18 வயது நிரம்பாத சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில்,  ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜ.வினர், தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலியின் பேரனும், சார்மினார் தொகுதி எம்எல்ஏ.வின் மகனும் கூட்டு பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டினர். ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தனர். இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில்  புயலை கிளப்பி வருகிறது.* உண்மை குற்றவாளிகள் அல்ல பாஜ எம்எல்ஏ. குற்றச்சாட்டு துப்பாக சட்டமன்ற தொகுதி பாஜ எம்எல்ஏ ரகுநந்தன் கூறுகையில், ‘‘காரில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது, அங்கு சிறுமியுடன் எம்ஐஎம் கட்சி எம்எல்ஏ மகன் இருந்ததற்கான புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு, போலீசார் உயர் பதவிகளுக்காகவும் வேறு சிலவற்றுக்கும் ஆசைப்பட்டு, உண்மையான குற்றவாளிகளுக்கு பதிலாக வேறு சிலரை வழக்கில் சேர்த்துள்ளனர். விரைவில் இந்த ஆதாரங்களை போலீசாரிடம் வழங்குவதா? அல்லது சிபிஐ விசாரணை கேட்பதா? அல்லது நீதிமன்றத்திடம் நேரடியாக ஒப்படைப்பதா? என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.