“காங்கிரஸ் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்கிறது” என்றிருக்கிறார் அந்தக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி. அவரிடம் `ஜி 23′ தலைவர்கள், உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் செயல்பாடு எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து சில கேள்விகளை முன் வைத்தேன்…
“எத்தனையோ புதிய குழுக்கள் உருவாக்குகிறீர்கள். ஜி 23 தலைவர்கள் கேட்பது போல ஆட்சி மன்றக் குழு கொண்டுவருவதில் என்ன சிக்கல்?”
“காங்கிரஸ் கட்சியில் ஜி 23 என்ற ஓர் அமைப்பே இல்லை. காங்கிரஸ் கட்சியில் அதிகாரமிக்க காரியக் கமிட்டி இருக்கிறது. அதில் ஜி 23 தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் என்ன பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதை அங்கே பேசலாமே. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு விதிகளில் அப்படி ஓர் ஆட்சி மன்றக் குழு அமைக்க வேண்டும் என்ற விதி இருக்க வேண்டுமில்லையா. விதிகளில் இருக்கும்படி செயல்பட்டாலே கட்சி மீண்டுவிடும்.”
“காங்கிரஸ் கட்சியில் வேறு குழுவே இல்லை என்கிறீர்களா?”
“கருத்துகளை வெளியில் சொல்கிறார்கள் என்பதற்காகக் கட்சிக்குள் பிரச்னை இருக்கிறது, மற்றொரு அணி இருக்கிறது என்று பொருளில்லை. இந்தச் சிந்தனை அமர்வில் 19 வயதுடைய மாணவப் பொறுப்பாளர் தொடங்கி, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்கள் வரை ஒரே இடத்தில் அமர்ந்துதான் பேசினோம். இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர எங்கள் கட்சியில் இருப்பவர்களுக்கு வேறெந்தக் கருத்துமில்லை. காங்கிரஸ் கட்சி ஜனநாயகமிக்க அமைப்பு என்பதால் தங்கள் கருத்து பொதுவெளியில் சொல்லத் தலைமை அனுமதிக்கிறது. அப்படியான கட்சியைத்தான் எளிதாகக் கேள்வி கேட்டு விடுகிறீர்கள்.”
“சிந்தனை அமர்வு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால் கட்சிக்குள் மீண்டும் குழுப்பம் ஏற்படும் சூழல் இருக்கிறதே?”
“எந்தக் குழப்பமும் ஏற்படாது. 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு 50 சதவிகித பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படுகிறது. கட்சியில் ஒரே குடும்பத்தில் இரண்டாவதாக சீட் கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது வேலை செய்திருக்க வேண்டும் என்கிறோம். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்களின் மகன் கல்லூரியில் இருந்து படித்து வந்ததும் சீட் வாங்கி விடுவார். அதனால், நீண்ட நாள்களாகப் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். எனவேதான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தாலும்கூட கட்சிப் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே இனி வாய்ப்பு என்பதை இதன்மூலம் நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம்.”
“ஆனால், காங்கிரஸ் கட்சி மக்கள் பிரச்னை குறித்துப் பேசாமல் மக்களைவிட்டுத் தூரமாகச் சென்றுவிட்டது என்கிறார்களே?”
“நிச்சயமாக இல்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் கட்சியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை கடுமையாக எதிர்க்கிறோம். ஏனென்றால் அந்தச் சித்தாந்தம் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் எதிரானது. நாங்கள் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கவில்லை. இனி அதைச் செயல்படுத்துவோம். அப்போது இப்படியான விமர்சனங்களுக்குப் பதில் கிடைக்கும்.”
“பா.ஜ.க ஆட்சி குறித்து இதுவரை எந்த போராட்டமும் நடத்தவில்லையே, அதற்கான தேவை இல்லை என நினைக்கிறீர்களா?”
“பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால், அவை எதுவும் ஊடகங்களில் வருவதில்லை. எல்லாம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எங்கள் தலைவர் ராகுல் காந்தி பேசுவதை யாருமே செய்தியாக்குவதில்லை. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பேசியதுபோல 200 இடங்களில் பேசியிருப்பார். அவை எதுவும் இதுவரை வெளியில் வரவில்லை. இதுமட்டுமல்ல இந்தியாவில் சமூக ஊடகங்கள்கூட ராகுல், காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் கருத்துகள் பெரிய அளவில் சென்று சேர்ந்துவிடாமல் தவிர்க்கிறார்கள். தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள்கூட ஆளுங்கட்சியின் அழுத்தத்தில் இருக்கின்றன. இப்படி ஓர் அசாதாரணமான சூழலில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக நிற்பதே பெரிய விஷயம். இவற்றை எல்லாம் எதிர்கொண்டு 2024-ல் தலைவர் ராகுலை பிரதமர் ஆக்குவோம்…”
“உங்கள் செயல்பாட்டில் குறையை வைத்துக்கொண்டு ஊடகங்களைப் புகார் சொல்வது நியாயமா?”
“நாங்கள் ஊடகங்கள்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம் என்று சொல்லவில்லை. ஆனால், எங்களை ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கின்றன என்றுதான் சொல்கிறோம்.”
“இவ்வளவு பேசும் உங்களால் கட்சித் தலைமையையே தேர்ந்தெடுக்க முடியவில்லையே, தற்காலிகத் தலைவரை வைத்துதானே கட்சி இயங்குகிறது?”
“சோனியா காந்தியைத் தற்காலிகத் தலைவர் என்று சொல்வது பா.ஜ.க திட்டமிட்டு செய்யும் அரசியல். சோனியா காந்தி தலைவராகப் பொறுப்பேற்றபோது காங்கிரஸ் இரண்டு மாநிலங்களில்தான் ஆட்சியிலிருந்தது. அதன்பின்பு 15 மாநிலங்களில் ஆட்சி அமைத்து மத்தியிலும் ஆட்சியைக் கொண்டுவந்தோம். எனவே, அப்படியான வெற்றிகரமான தலைவரின் தலைமையில்தான் காங்கிரஸ் இப்போதும் செயல்படுகிறது.”
“தற்காலிகத் தலைவர் என்று சொன்னதே காங்கிரஸ் கட்சிதானே?”
“ஆமாம், நாங்கள்தான் சொன்னோம். ஒரு தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் கழித்துதான் அந்தத் தேர்தல் நடக்கும், ராகுல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஓராண்டில் பதவிலியிருந்து விலகிவிட்டார். தலைவர் பதவி விலகிவிட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த அமைப்பையும் கலைக்க முடியுமா? காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு பிராசஸ். அதன்மூலம்தான் தலைவரைத் தேர்வு செய்ய முடியும். முறையாகத் தேர்தல் நடத்தி செப்டம்பரில் ராகுல் தலைவராகப் பதவியேற்பார்.”
“பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத அளவு வரவேற்பு இருந்ததே?”
”அந்த வரவேற்பு பாரதிய ஜனதா கட்சி கொடுத்தது. ஓரிடத்தில் வளர வேண்டும் என நினைக்கும் கட்சி இப்படிச் சிலவற்றைச் செய்யத்தான் செய்வார்கள். ராகுல் வந்தால் நாங்கள் வரவேற்பு கொடுப்பதைக் கேள்வி கேட்க முடியுமா? பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் அப்படிப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்கள்.”