லண்டன்,
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்னும், இங்கிலாந்து அணி 141 ரன்னும் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனை அடுத்து 9 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 79 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது. டேரில் மிட்செல் 97 ரன்னுடனும், டாம் பிளன்டெல் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. மிட்செல், பிளன்டெல் ஆட்டத்தை தொடர்ந்தனர். முதல் ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் 3 ரன்கள் எடுத்த மிட்செல் சதத்தை எட்டினார். அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும்.
நிலைத்து நின்று ஆடிய மிட்செல் (108 ரன்கள், 203 பந்து, 12 பவுண்டரி) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பென் போக்சிடம் சிக்கி வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு மிட்செல்-பிளன்டெல் ஜோடி 195 ரன்கள் திரட்டியது. அடுத்து வந்த காலின் கிரான்ட்ஹோம் (0) முதல் பந்திலேயே ஆலி போப்பால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு நடையை கட்டினார்.
அடுத்து வந்த கைல் ஜாமிசன் (0) ஸ்டூவர்ட் பிராட் பந்து வீச்சில் போல்டு ஆனார். தொடர்ச்சியாக 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் பறிபோனது.சதத்தை நெருங்கிய பிளன்டெல் 96 ரன்கள் (198 பந்து, 12 பவுண்டரி) எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. டிரென்ட் பவுல்ட் 4 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், மேத்யூ போட்ஸ் தலா 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும், மாட் பார்கின்சன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.இதன் மூலம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது.
தொடக்க ஆட்ட காரர்களாக ஜேக் கிராவ்லி,அலெக்ஸ் லீஸ் களமிறங்கினர்.இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.அலெக்ஸ் லீஸ் 20 ரன்களுக்கும்,ஜேக் கிராவ்லி 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜோரூட் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் ஓலி போப் 10 ரன்களுக்கும்,பேர்ஸ்டோ 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.அடுத்து ரூட்டுடன் கேப்டன் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார்.
தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய இந்த ஜோடி மிகவும் கவனமுடன் ஆடினர்.சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் 54 ரன்கள் எடுத்து ஜேமிசன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டாம் பிளண்டலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் களம் புகுந்தார்.மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்ட இவர்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.அரைசதம் விளாசிய ஜோ ரூட் 77 ரன்களுடனும் ,ஃபோக்ஸ் (9ரன் 48 பந்து) களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டும்,போல்ட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.4 ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
போட்டி முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 61 ரன்களே தேவைப்படுகிறது.கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளதால் போட்டி இங்கிலாந்தின் கைவசம் உள்ளது.ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இருப்பதால் நாளைய நாள் போட்டி விறுவிறுப்பாக மாறி உள்ளது.