புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வாங்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது சிபிஐ.யும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, சோனியா காந்திக்கு வரும் 8ம் தேதியும், ராகுலுக்கு கடந்த 2ம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால், சோனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், விசாரணைக்கு அவர் ஆஜராவதில் சந்தேகம் எழுந்துள்ளது. வெளிநாட்டில் இருந்ததால் கடந்த 2ம் தேதி ராகுலும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 5ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக அமலாக்கத் துறைக்கு அவர் கடிதம் எழுதினார். அதன்படி, வரும் 13ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பி உள்ளார்.