ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அனந்தநாக் மாவட்டம், கரன் வெரிநாக் பகுதியில் உள்ள கவாஸ் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்தனர். தகவலின் பேரில் இந்த இடத்தை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலையில் சுற்றிவளைத்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் மோதல் ஏற்பட்டது. பல மணி நேரம் நீடித்த மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 ராணுவ வீரர்களும் கிராமவாசி ஒருவரும் காயம் அடைந்தனர்.
என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் நிசார் கண்டே என அடையாளம் காணப்பட்டார். அனந்தநாக் மாவட்டம், தூரு கிராமத்தை சேர்ந்த நிசார்கண்டே கடந்த 2018 அக்டோபரில் தீவிரவாதப் பாதைக்கு மாறியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். காயம் அடைந்த 4 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் சம்பவ இடத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.