“அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது” எனக்குறிப்பிட்டுள்ளார் பாஜக அண்ணாமலை.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பல முக்கிய மசோதா நிறைவேற அதிமுக எங்களுக்கு துணையாக இருந்தது. அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. 20 சதவீத மக்கள் தேசிய அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர். அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம். அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. எங்களது கட்சி குறித்து அதிமுகவினர் சிலர் தவறான கருத்தை கூறினாலும் ஓபிஎஸ், இபிஎஸ் அதை ஏற்க மாட்டார்கள்.
சீமானுக்கு அவரது கட்சியை முதலிடம் கொண்டுவர ஆசை இருப்பதுபோல, பாஜகவை முதலிடம் கொண்டுவர எனக்கும் ஆசை இருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான், எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும். இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்.
இதையும் படிங்க… ராசிபுரம்: பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி – 7 பேர் கைது
குறு சிறு நிறுவனங்கள் அதிகமிருப்பது தமிழகத்தில்தான். எனவே லூலூ மால் இங்கு தேவை கிடையாது. பீகார், உத்தரபிரதேசத்துக்கு வேண்டுமானால் அந்த நிறுவனம் தேவைப்படலாம். லூலூ மால் வந்தால் அண்ணாச்சி கடைகள் கூட காணாமல் போய்விடும். ரிலையன்ஸ் இதுபோன்ற தவறை செய்தால், நாங்கள் அப்போது அதை கண்டிப்போம்” என்றுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM