சென்னை: தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர்ஆவடி நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழகத்தில் மாவட்டம் அளவில் புத்தக கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சியில் இது தான் முதல் புத்தக கண்காட்சி. இங்கு வருபவர்கள் இங்கே அமர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருக்ககூடிய பரிசோதனை மையத்துக்கு தமிழகத்தில் இருந்து 150 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது நேற்று அதன் முடிவுகள் வெளிவந்தது. அதில் 12 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, BA4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், BA5 என்ற புதிய வகை தொற்று 8 பேருக்கும் உறுதியாகியுள்ளது. 12 பேரும் சென்னையை சுற்றி உள்ளவர்கள். அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். தொடர்பில் இறந்தவர்களையும் பரிசோதனை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.