`மத்திய பா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கை வழியே, மறைமுகமாக இந்தி மொழியைத் திணிக்கிறது’ என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “காங்கிரஸ் மாநாட்டில் அனைவரும் இந்தி படிக்க வேண்டும், இந்தி பேச வேண்டும் என காந்தியடிகள் கூறியபோது அந்த மேடையிலேயே மறுத்துப் பேசினார் பெரியார்.
`நான் கொண்டுவந்த சட்டங்களில் சில சட்டங்களை மாற்ற முடியாது. தமிழ்நாடு என்ற பெயரையும், சுயமரியாதை திருமணச் சட்டத்தையும், தமிழும் ஆங்கிலமும்தான் என்ற சட்டங்களை யாராலும் மாற்ற முடியாது!’ என அண்ணா கூறினார். அண்ணாவிற்கு பிறகு இந்தித் திணிப்பை கலைஞர் எதிர்த்தார். தற்போது உள்ள மத்திய அரசாங்கம் இந்தி மொழியை திணித்து வருகிறது. சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்துவிடலாம் என அமித் ஷாக்கள் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் இந்தித் திணிப்பை அழிப்போம். தமிழ் வாழ்க இந்தி அழிக” என்றார்.