பெங்களூரு : ராஜ்யசபா தேர்தலில், ஒவ்வொரு ஓட்டும் மூன்று கட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு, திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. இவர்களின் ஆதரவை பெற, அரசியல் கட்சிகள் முட்டி மோதுகின்றன.கர்நாடக சட்டசபையில், மொத்தம் 224 எம்.எல்.ஏ.,க்களில், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
முல்பாகலின் நாகேஷ், ஹொஸ்கோட்டின் சரத் பச்சேகவுடா, கொள்ளேகாலின் மகேஷ் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள். இவர்களுக்கு மூன்று கட்சிகளும் வலை விரித்துள்ளன.மகேஷ் ஏற்கனவே பா.ஜ.,வுடன், அடையாளம் காணப்பட்டவர். 2023ன் சட்டசபை தேர்தலில், இவருக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் கார்ப்பரேஷன் தலைவர் நாகேஷும், பா.ஜ.,வுடன் அடையாளம் காணப்படுகிறார்.
ஆனால் அவருக்கு இப்பதவி திருப்தியில்லை.சில நாட்களுக்கு முன்புதான், இவர் சித்தராமையாவை சந்தித்து பேசினார். தன் அரசியல் எதிர்க்காலத்தை மனதில் கொண்டு, ராஜ்யசபா தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக, நாகேஷ் ஓட்டுப்போட்டாலும் ஆச்சர்யப்பட முடியாது. அதே போன்று, சரத் பச்சேகவுடா, காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கிறார். ராஜ்யசபா தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போட வேண்டுமென, அந்தந்த கட்சிகள் கொறடா உத்தரவு’ வெளியிட்டுள்ளன.
அரசியல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டுமே, இந்த உத்தரவு பொருந்தும். சுயேச்சைகளுக்கு பொருந்தாது. இவர்கள் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும், ஓட்டு போடலாம்.எனவே சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவதில், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் போட்டி போடுகின்றன.
Advertisement