சென்னை: தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுவதால் இதனைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடிலம் விபத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.குச்சிப்பாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றுத் தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்ற கர்ப்பிணி மற்றும் நர்ஸிங் மாணவிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 4 சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தடுப்பணை கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்படாதது தான் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.