மாஸ்கோவ்: உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் வெளியான புதினின் பேட்டியில் அவர், “மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா இதுவரை தாக்காத புதிய இலக்குகளைத் தாக்கும்.
இந்த ஆயுதங்கள் போர்க்களத்தில் எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. அமெரிக்கா மற்றும் சில நாடுகள் வழங்கியிருக்கும் ஆயுதங்களில் புதிதாக எதுவும் இல்லை.
சோவியத், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதே அமைப்புகளைக் கொண்ட ஆயுதங்களையே உக்ரைனியே படைகள் வைத்துள்ளன. ஏவுகணை தாக்குதலின் வீச்சு அதன் அமைப்பை பொறுத்து இல்லை. மாறாக அதில் பயன்படுத்தப்படும் ஏவுகணையைப் பொறுத்தது.
அவர்களிடம் உள்ளவை 45 – 70 கிமீ தூரம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் நோக்கம் முடிந்த வரையில் இந்த தாக்குதலை நீடிக்க வேண்டும் என்பதே” என்று தெரிவித்திருந்தார்.
தங்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்ற உக்ரைனில் தொடர் வலியுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வாரம் உக்ரைனுக்கு துல்லியமான தாக்குதலை நடத்தும் HIMARS ராக்கெட் அமைப்புகளை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் புதின் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.