க.சண்முகவடிவேல், திருச்சி
தமிழகத்தில் பள்ளி திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழாமை கூறினார்.
திருச்சி காட்டூரில் இன்று(5.6.2022) நடைபெற்ற விழாவில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 167 பயனாளிகளுக்கு பட்டா, 40 மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட உதவி உபகரணங்கள், 50 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூபாய் 1.78 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறைஅமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
முன்னதாக திருச்சி நவல்பட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தினை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (5.6.2022) திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; பள்ளி திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கொரோனா பெருந்தொற்று பரவல் தற்போது மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலனுக்கு எந்தவிதத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றோம். அதனடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.
நமது தமிழகத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவோம். அதுதான் நம் மாநிலத்திற்கும் நல்லது. நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே என நம்மிடம் கூறுகின்றார் என்றார்.
பின்னர், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரக்கன்று நடும் விழாவை காட்டுரில் துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், வட்டாட்சியர் எஸ்.ஆர்.ரமேஷ், துணைமேயர் ஜி.திவ்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாமன்றஉறுப்பினர்கள் சிராஜுதீன், மதிவாணன், நீலமேகம், தர்மராஜ், கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கே.எஸ்.எம்.கருணாநிதி, ஒன்றியக் குழுத்தலைவர் சத்யா கோவிந்தராஜ், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தி.ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“