திருமணமான 2 மாதத்தில் மயக்கமடைந்த புதுப்பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்கள்; அரசு மருத்துவமனையில் அலட்சியம்

திருமலை: அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மயக்கமடைந்த புதுப்பெண்ணை இறந்ததாக கூறிய டாக்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் சின்ன ஐதராபாத்தை சேர்ந்தவர் நரசிம்மலு மகள் அர்ச்சனா (20). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் மாமியார் வீட்டில் இருந்த அர்ச்சனா, கடந்த மாதம் 7ம் தேதி உணவு சாப்பிடாமல் விரதம் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அர்ச்சனாவை அருகில் உள்ள ஜஹீராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், இசிஜி எடுத்து பார்த்துவிட்டு அர்ச்சனா இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். மேலும் இறப்பை உறுதிசெய்த மருத்துவமனை நிர்வாகம், அர்ச்சனாவின் பெற்றோரை மருத்துவ கோப்பில் கையெழுத்திட வைத்துள்ளனர். இதையடுத்து சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்லலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது திடீரென அர்ச்சனாவின் கைவிரல்கள் லேசாக அசைந்தது. இதைக்கண்ட குடும்பத்தினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அர்ச்சனாவை உடனடியாக சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அர்ச்சனா உயிருடன் இருப்பதாக கூறி சிகிச்சையை தொடங்கினர். பின்னர் அவர் குணமடைந்ததால் கடந்த 22ம்தேதி  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை முதல்வரிடம் அர்ச்சானாவின் பெற்றோர் நேற்று புகார் தெரிவித்தனர். இதற்கிடையில் அர்ச்சனா இறந்துவிட்டதாகக்கூறி பெற்றோரிடம் கையெழுத்து பெறப்பட்ட கோப்பில், ஒயிட்னர் தடவிவிட்டு வேறு நபரிடம் கையெழுத்து பெறப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜஹீராபாத் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சேசுபத்மநாபராவ் கூறுகையில், ‘மயக்க நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அர்ச்சனாவுக்கு அன்றைய தினம் இசிஜி எடுக்கப்பட்டது. அதில் பதிவுகள் வராமல்கோடு வந்துள்ளது. எனவே அர்ச்சனா இறந்துவிட்டார் என ெதரிவித்திருக்கிறார்கள். சில நேரங்களில் இசிஜி கருவியில் கோளாறு ஏற்பட்டிருந்தாலும் இதுபோன்று கோடு வர வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அதனை டாக்டர் முறையாக நோயாளியை பரிசோதித்து இருக்கவேண்டும். எனவே இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படும்’ என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.