அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மொத்தமாக கடனாளியான ஒருவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்று கடவுள் பெயரில் பழியை போட்டுள்ளார்.
குறித்த நபருக்கு பரோல் வாய்ப்பு இல்லாமல் நான்கு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகள் விதித்துள்ளது நீதிமன்றம்.
புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள செலப்ரேஷன் நகருக்கு 2017ல் அந்தோனி டோட் குடும்பம் குடிபெயர்ந்துள்ளது.
அவரது மனைவி மேகன் தமது மூன்று பிள்ளைகளுக்கும் வீட்டில் இருந்தே கல்வி புகட்டுவதில் நேரம் செலவிட்டு வந்தார்.
அந்தோனி டோட் வார இறுதி நாட்களில் உள்ளூர் சிறார்களுக்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சி அளித்து வந்துள்ளதுடன், கனெக்டிகட்டில் உடல் சிகிச்சை பயிற்சி பெற்று மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியும் வந்துள்ளார்.
மேலும், அந்தோனி டோட் குடும்பம் அடிக்கடி சுற்றுலாவுக்கும் சென்று வந்துள்ளது. இந்த நிலையில், 2019ல் அந்தோனி டோட் முன்னெடுத்து வந்த தொழில் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் சிகிச்சை அளிக்காத நோயாளிகள் பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து தொகை வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மட்டுமின்றி, குடும்பச் செலவை சமாளிக்க அதிக-வட்டிக் கடன்களை பலமுறை பெற்றுள்ளார் எனவும், மொத்தமாக சுமார் 200,000 டொலர் எனவும் விசாரணையில் அம்பலமானது.
மட்டுமின்றி, விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்யாமல், குடும்பத்தினருடன் இருக்கவே அதிகாரிகள் தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், இந்த தகவல் ஏதும் மேகன் அறிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு வாடகை செலுத்த முடியாமல் வெளியேற்றப்படும் சூழலும் உருவானது.
இந்த நிலையில், 2020 ஜனவரி 13ம் திகதி மேகனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் பொலிசார் அந்தோனி டோடின் குடியிருப்புக்கு நலம் விசாரிக்க சென்றுள்ளனர்.
எந்த பதற்றமும் இன்றி பொலிசாருக்கு பதிலளித்த டோட், தமது மனைவி தூக்கத்தில் இருப்பதாக பொலிசாரிடம் பதிலளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் குடியிருப்புக்கு உள்ளே சென்று பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதன்மை படுக்கையறையில் மேகன் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் சடலமாக காணப்பட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட அவர்களின் சடலங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், கொல்லப்பட்டு பல வாரங்கள் கடந்திருக்கலாம் என தெரிய வந்தது.
முதற்கட்ட விசாரணையில், பேரழிவு காத்திருப்பதாகவும் அதில் இருந்து தப்பவே மேகன் மற்றும் பிள்ளைகளை கொலை செய்ததாக டோட் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பிள்ளைகளுக்கு விஷம் கலந்த உணவு அளிக்கப்பட்டதும், மனைவி மேகனை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளதும் அம்பலமானது.
மட்டுமின்றி, தமது குடும்பத்தினரின் சடலங்களை திட்டமிட்டே வீட்டில் மூன்று வாரங்கள் வரையில் பாதுகாத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு பரோல் வாய்ப்பு இல்லாமல் நான்கு தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகள் விதித்துள்ளது.
ஆனால் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக இல்லை என அவர் நீதிமன்ரத்தில் தெரிவித்திருந்தார். எந்த குற்றமும் தாம் செய்யவில்லை எனவும் அவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.