சென்னை: “முதல் தர கல்வி முழுமையான வளர்ச்சி” என்பதை நோக்கமாகக் கொண்டு சென்னை பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்தாண்டு பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க சென்னை மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறன்றன. இதன்படி கடந்த ஆண்டு செய்த முயற்சியால் சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது.
1.15 லட்சம்: சென்னை பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் படிக்கும் கட்டமைப்புகள் உள்ளன. அதன்பின், 88 ஆயிரம் முதல், 95 ஆயிரம் வரை என்ற சராசரி நிலையில் தான் மாணவர் சேர்க்கை இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை 1.15 லட்சமாக உயர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டியது. இந்தாண்டு இதை மேலும் அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
புதிய இலட்சினை: சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகள் புதிய இலட்சினை உருவாக்கப்பட்டுள்ளது.”முதல் தர கல்வி முழுமையான வளர்ச்சி” என்பதை நோக்கமாக சென்னை பள்ளிகள் செயல்படும் என்று எடுத்து காட்டும் வகையில், புத்தகத்துடன் இணைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் இதைதான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேட்ஜ்: சென்னை பள்ளிகளில் மாணவர்களுக்கு பேட்ஜ் வழங்கும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. இதன் பள்ளி தலைவர், வகுப்பு தலைவர், உதவி வகுப்பு தலைவர்கள், விளையாட்டு தலைவர்கள் என்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பேட்ஜ் வழங்க சென்னை மாநகராட்சி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இது இந்த கல்வியாண்டில் அமலுக்கு வர உள்ளது.
குழுக்கள்: சென்னை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். இந்த குழுக்களுக்கு ஒவ்வொரு குழுக்களும் ஒரு பெயர் இடப்படும். இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் அளவில் இந்த குழுக்களுக்கு இடையில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும். இது மாணவர்களை பல்வேறு நிலைகளில் மேம்படுத்தும் என்று சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேம்பாடு: இந்தாண்டு சென்னை பள்ளிகளில் இணைய வசதி, திறன் கண்காட்சி, சிசிடிவி வசதி, தற்காப்பு கலை பயிற்சி, இ – நூலம், ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர்கள் கற்றல் வசதிகளை மேம்படுத்த இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது. மேலும் சிட்டிஸ் திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பல்வேறு புதிய முயற்சிகள் சென்னை பள்ளிகளை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இந்தாண்டு மாணவர்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.