தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன் இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே ஆன அந்த புலிக்குட்டியின் உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனிக் கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஓன்றரை வயதான (16 மாதம்) அந்த புலிக் குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வரும் நிலையில் அதன் உடல் எடையும் 140 கிலோவாக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் புலிக்குட்டியை வனப்பகுதியில் விட்டால் அது வேட்டையாடும் பழக்கமின்றி சர்வைவல் செய்ய முடியாத நிலை ஏற்படலாம் என்பதால், புலி குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்க கோவை மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி, கூண்டு, மின்சார வேலி, கூண்டை சுற்றியும் மண் அகழி எனப் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தானியங்கி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 75 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கூண்டிற்குள் புலிக்குட்டி விடப்பட்டுள்ளது. அது உட்கொள்ளும் சிறிய விலங்குகளை விட்டு வேட்டையாடும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புலி சிறிய கூண்டியிலிருந்து பெரிய கூண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: ‘மண்ணை ஒரு வளமாக கருதக்கூடாது; உயிராக கருத வேண்டும்’- ஜக்கி வாசுதேவ் கருத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM