கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த ஏ.குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 4 சிறுமிகள் உட்பட 7 பேர் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கிதாகவும், மயங்கிய நிலையில் அவர்களை மீட்ட ஊர் பொதுமக்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கடலூர் கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளித்தது; ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டுகிறேன் என்று, சற்றுமுன் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ வேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறு உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.