கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் அளிக்கும் 19வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து, அனைத்து அதிகாரங்களும் அதிபர் வசம் வரும் வகையில், 20ஏ என்ற சட்ட திருத்தத்தை மேற்கொண்டார்.இந்நிலையில், அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை அடுத்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
அந்த வகையில், அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம் மேற்கொள்ள முயற்சிகள் நடந்து வருகின்றன.இது தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முடிந்து, தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், 21 சட்ட திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை தாக்கல் செய்யபட உள்ளதாக இலங்கை சட்ட அமைச்சர் விஜயதாசா ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.
ரஷ்ய விமானம் நிறுத்தம்:இலங்கை பிரதமர் விளக்கம்
ரஷ்யாவின், ‘ஏரோப்ளோட்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணியர் விமானம், இலங்கையில் இருந்து புறப்பட, அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, 191 ரஷ்ய பயணியர் மற்றும் 13 விமான நிலைய ஊழியர்களும் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த செயலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவுக்கான இலங்கை துாதரை அழைத்து விளக்கம் கேட்டது. இந்நிலையில், ”இது இரு நாட்டுக்கு இடையிலான பிரச்னை அல்ல. ரஷ்ய விமான நிறுவனத்துக்கும், இலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை,” என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார்.