பந்தலுார் : கேரள மாநிலம், வயநாடு பகுதியில், பழங்குடியினரின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், ‘என் ஊரு’ எனும் மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு, சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் இருந்து 20 கி.மீ., தொலைவில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், பூக்கோடு மலைப்பகுதி உள்ளது. பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில், ‘என் ஊரு’ என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்க, கேரள அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த 2016ல், ‘மாவட்ட நிர்மிதி கேந்திரா’ எனும் அமைப்பிடம் இதற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.
25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மீண்டும் கூடுதல் நிதி ஒதுக்கி, 2018ல் பணிகள் துவக்கப்பட்டன. அங்கு, பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில, குடியிருப்புகள், வனப்பகுதியில் சேகரிக்கப்படும் பொருட்கள் விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம், மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது. கலெக்டர் ஸ்ரீலட்சுமி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் கட்டடங்களை திறந்து வைத்தார்.
Advertisement