ஸ்ரீநகர்: ஜம்ம காஷ்மீரில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை, வரும் ஜூன் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. சமீபத்தில், பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய டிரோனை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதில், 7 காந்த வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இந்த காந்த வெடிகுண்டுகள் புதிதாக இருப்பதால், பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர். குறிப்பாக, பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் தங்களின் வாகனங்களை தனியாக விட்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அமர்நாத் யாத்திரையின்போது, வாகனங்களில் காந்த வெடிகுண்டுகளை ஒட்ட வைத்து, தாங்கள் விரும்பும் இடத்தில் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக தீவிரவாதிகள் அதை வெடிக்க வைக்கும் அபாயம் உள்ளது. இந்த சதியை முறியடிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பாதுகாப்பு படைகள் ஆலோசித்து வருகின்றன.