காஷ்மீர் விவகாரத்தை பா.ஜ.க. வால் கையாள முடியாது என டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்ட ‘மக்கள் ஆக்ரோஷ கூட்டத்தில்’ டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.
காஷ்மீரில் உள்ள பண்டிட் ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் போலீசார் என சிலரை குறிவைத்து தீவிரவாதிகள் சுட்டு கொல்கின்றனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் காஷ்மீரை விட்டுமொத்தமாக வெளியேறப்போவதாக கூறி, காஷ்மீர் பண்டிட்டுகள் போராட்டம் நடத்தி வருகின் றனர். சுமார் 80 சதவீதம் பேர் காஷ்மீரை விட்டு வெளியேறி ஜம்மு பகுதிக்கு சென்று விட்டனர்.
மக்கள் ஆக்ரோஷ கூட்டம்
இதற்கு பா.ஜ தலைமையிலான மத்திய அரசுதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி, காஷ்மீரில் ஒரு பிரிவினர் தீவிரவாதிகளால் குறிவைத்து படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில்‘மக்கள் ஆக்ரோஷ பொதுக்கூட் டத்தை’ நேற்று நடத்தியது.
இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், எம்.பி சஞ்சய் சிங், மற்றும்ஆம் ஆத்மி கட்சியின் இதர எம்.எல்.ஏக்.கள் கலந்துகொண்டு பா.ஜ.க.வுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இந்த கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது: தீவிரவாதிகள் தங்கள் மீதுதாக்குதல் நடத்துவதால், காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீரை விட்டுவெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும்
காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. இது போன்ற கீழ்தரமான வியூகங்களை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருக்கும்.
90-களில் நடந்தது போல…
கடந்த 1990-ம் ஆண்டுகளில் நடந்தது போல், காஷ்மீர் பண்டிட்டுகள், தங்களை வீடுகளை காலிசெய்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தைபா.ஜ.க.வால் கையாள முடியாது.மோசமான அரசியல் செய்வது மட்டும்தான் பா.ஜ.க.வுக்கு தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் தயவுசெய்து அரசியல் வேண்டாம். காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீருக்கு வெளியே பணியாற்ற முடியாது என்ற நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பண்டிட்டுகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
எம்.பி. சஞ்சய் சிங் பேசுகை யில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும்போது, காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீரை விட்டுவெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஏற்பட்டநிலை தற்போது நிலவுகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு போதியபாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும்’’ என்றார்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ட்விட்டரில் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா விடுத்துள்ள செய்தியில், ‘‘காஷ்மீர் வரலாற்றில் இது மோசமான காலகட்டமாக கருதப்படும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதை தடுப்பதில் பா.ஜ.க அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது’’ என குறிப்பிட்டிருந்தார்.