ஜெர்மனியில் பட்டையை கிளப்பும் கமலின் ‛விக்ரம்'

பத்தல பத்தல……
சீட்டும் பத்தல…
டிக்கெட்டும் பத்தல…
மத்தளம் அட்ரா டேய்…….

ஜெர்மனியில் இப்படித்தான் கமல்ஹாசனின் விக்ரம் படப் பாடலை பாட வேண்டியிருக்கிறது. ஆம், ஜெர்மனியின் பல நகரங்களில் விக்ரம் படத்துக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை. தியேட்டருக்கு போய் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து படம் பார்க்க சென்றவர்கள் பலர் ஏமாற்றத்துடனேதான் திரும்பியுள்ளனர். அதன் பிரதிபலிப்பு, அனைவருமே படத்துக்கான டிக்கட்டை ஆன்லைனில் புக் செய்ய ஆரம்பித்துள்ளனர். பல வருடங்களாக ஹவுஸ்புல் என்ற வார்த்தையை மறந்திருந்த ஜெர்மனியின் தமிழ் திரைப்பட தியேட்டர் உலகம், விக்ரம் திரைப்படத்தால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெர்மனியில் ஹவுஸ்புல்லான திரைப்படம் என்ற பெருமை கமல்ஹாசன் நடித்த விக்ரமையே சாரும்.

பொதுவாக ஜெர்மனியில் எந்த தமிழ் படமும் சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் தான் ரிலீஸ் ஆகும். அப்போது தான் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வசதியாக இருக்கும். ஆனால் விக்ரம் படத்தைப் பொறுத்தவரையில் நிலைமை வேறு. 3ம் தேதி காலையிலேயே படத்தைப் பற்றி நல்ல ரிவியூ வந்த காரணத்தினால் ஆன்லைன் புக்கிங்கிலேயே பல ஊர்களில் டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட வேண்டும் என்று விருப்பியவர்கள் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை தொடங்கியவுடனே வாங்கிவிட்டனர். தமிழ் மக்கள் கூடும் இந்திய கடைகள், நிகழ்ச்சிகள் என எதிலும் விக்ரம் பற்றியும் பேசப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி படமும் மிக சிறப்பாக அமைந்தது அனைவரின் எதிர்பார்ப்புக்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.

பிராங்க்பர்ட், பெர்லின், மூனிச் போன்ற பெரிய நகரங்களிலும் பீலபெல்டு போன்ற சிறு நகரங்களிலுமாக முப்பதுக்கும் அதிகமான தியேடர்களில் விக்ரம் திரையிடப்பட்டுள்ளது. அதிலும் ஸ்டுட்கார்ட், டோர்ட்முண்ட் போன்ற நகரங்களில் வெள்ளிக்கிழமை இரவு 10:45 க்கே முதல் ஷோ திரையிடப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில் எந்த படமும் இந்தளவு பின்னேரத்தில் ஜெர்மனியில் திரையிடப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஜூன் 6-ம் தேதி திங்கட்கிழமையும் ஜெர்மனியில் அரசு விடுமுறையாதலால் இந்த நான்கு நாட்களில் விக்ரம் வசூல் மிகப்பெரிய லாபத்தை விநியோகிஸ்தருக்கு பெற்றுக்கொடுக்கும்.

பிராங்க்பர்ட் நகரின் 'சினிஸ்டார் மெட்ரோபாலிஸ்' காம்ப்ளெக்ஸில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 12 தியேட்டர்கள் உள்ளன. அதில் முதல் மாடியில் உள்ள 'தியேட்டர் எண் :3' ல் விக்ரம் ஓடுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 15 ஈரோ. வரியுடன் சேர்த்து 16.30 யூரோ. இந்த தியேட்டரில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 283. ஹவுஸ்புல்லாக ஓடுவதால் அனைத்து இருக்கைகளும் நிறைந்துள்ளன. அப்படியானால் ஒரு ஷோவின் வருமானம் எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். திங்கட்கிழமையும் ஜெர்மனியில் விடுமுறையாதலால் மோன்சேன்கிளாட்பாக் போன்ற நகரங்களில் விக்ரம் திரையிடப்படுகிறது.

மூனிச் நகரில் உள்ள சிஞ்சினாட்டி திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை 17 ஈரோ. மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 430. ஆக மொத்தத்தில் இந்த நான்கு நாட்களில் விக்ரம் திரைப்படம் ஜெர்மனியில் மிகப்பெரிய அளவில் வசூலை குவிக்கும். ஜெர்மனியில் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் நாட்டியுள்ள கொடி நீண்டநாளைக்கு சிறகடித்துப் பறக்கும் என்பதில் ஐயமில்லை!

நமது செய்தியாளர் – ஜெர்மனி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.