மும்பை: பாலிவுட் நடிகை குப்ரா சைட், ‘ஓபன் புக்: நாட் காஃபிஸ் ஐன் மோயர்’ என்ற புத்தகத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த புத்தகத்தில், ‘எனக்கு 17 வயது இருக்கும்போது, குடும்ப உறுப்பினர்களுடன் பெங்களூருவில் உள்ள உணவகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஓட்டலின் உரிமையாளர், எங்கள் குடும்பத்தினருக்கு நண்பராகிவிட்டார். அவர், எனது தாயாருக்கு பண உதவி செய்துள்ளார். அதன்பின் அவர் என்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய தொடங்கினார். மேலும் தன்னை ‘மாமா’ என்று கூப்பிடவேண்டாம் என்று கூட சொன்னார். எனது தாய் தான் பெற்ற பணத்தை திருப்பித் தர முடிவு செய்த போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். காரில் அவருடன் செல்லும் போது, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவரது கைகள் என்மீது பட்டன. அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார். என் தாய் அவருக்கு சமைத்து கொடுப்பார். அந்த நபர் என் தாயின் முன், என் கன்னத்தில் முத்தமிட்டார். மற்றொரு நாள் என்னை அவரது ஓட்டல் அறைக்குள் அழைத்து சென்று, என்னிடம் தவறாக நடந்து கொண்டார். பாலியல் தொல்லை குறித்து குடும்பத்தினரிடம் சொன்னால், உன் குடும்பத்தை அழித்துவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பல ஆண்டுகள் மனவேதனையிலும், குழப்பத்திலும் தவித்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை கூட இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவங்களை என் தாயிடம் பகிர்ந்து கொண்டேன். என் தாய், நடந்த சம்பவங்களுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருந்தாலும் எனது கடந்த காலத்தை நினைவில் கொள்ள விரும்பவில்லை’ என்று அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். நடிகை குப்ரா சைட்டின் இந்த பதிவு, பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் அமைப்புகளும் நடிகைக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளன. பெங்களூரு ஓட்டல் உரிமையாளர் யார் என்றும் கேட்டு வருகின்றனர்.