புதுடெல்லி: இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துக்கு பதில் வேறு சிலரின் படத்தை பிரசுரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இப்போது புழக்கத்தில் உள்ள அனைத்து மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் படம் (வாட்டர்மார்க்) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஒருசில மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களின் படங்களை இடம்பெறச் செய்வது குறித்து மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்துக்கு பதில் வேறு சிலரின் படங்களுடன் மாற்றம் கொண்டுவருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.