பார்வை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய நாணயங்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ‘ஐகானிக் வாரம்’ கொண்டாட்ட நிகழ்ச்சி டெல்லியின் விக்யான் பவனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்தார். குறிப்பாக பார்வை மாற்றுத் திறனாளிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய நாணயங்களின் தொகுப்பை பிரதமர் வெளியிட்டார்.
இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழா முத்திரையுடன் புதிய ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து மற்றும் இருபது ரூபாய் நாணயங்களை பிரதமர் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த 8 ஆண்டுகளில், பாரதிய ஜனதா ஆட்சியில் ஏழைகளுக்கு அதிகாரமளித்தது, வளர்ச்சியை துரிதப்படுத்தியது போன்றவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
“ஸ்வச் பாரத் அபியான்” திட்டம் ஏழைகள் கண்ணியமான வாழ்க்கை வாழ வாய்ப்பளித்துள்ளது என்று கூறிய பிரதமர், ஆனால் முந்தைய ஆட்சியால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது என குற்றம்சாட்டினார். எனவே, தற்போது திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதையே முன்னுரிமையாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM