ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த யூடியூப் தொடரில் இயக்குநர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் எனப் பன்முகத்திறமை கொண்ட தங்கர் பச்சானைச் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து…
தங்கர் பச்சான் என்ற பெயர் உங்களின் இயற்பெயரா அல்லது நீங்களே சூட்டிக் கொண்டதா?
எனக்கு நானே சூட்டிக் கொண்டது தான்! என் இயற்பெயர் தங்கராசு. தங்கர் பச்சான் என்ற பெயர் உலகத்தில் வேறு யாருக்கும் இருக்காது. புதுமை வேண்டும் என்பதற்காக சூட்டிக் கொண்ட பெயர் அல்ல இது. என்னை சிறுவயதிலிருந்து தங்கர் என்றே அனைவருக்கும் தெரியும். என் தந்தையின் பெயர் பச்சான். எங்களுடைய குலதெய்வம் பச்சைவாழியம்மன். அத்தையின் பெயர் பச்சையம்மாள். தமிழர்களின் வழிபாட்டு முறையே இயற்கை வழிபாடு தான் அதன்பின் உருவ வழிபாட்டிற்கு மாறினோம். பச்சைமுத்து என்றால் மரங்கள், இலைகள். இவை அனைத்தையும் வணங்கியவர்கள் தான் நாம். என்னுடைய குலதெய்வத்தின் பெயர் பச்சான். 1985-ம் ஆண்டு அப்பா இறந்தபோது அவரின் நினைவாக என் பெயரை தங்கர் பச்சான் என மாற்றிக் கொண்டேன்.
உங்கள் தந்தை ஒரு தெருக்கூத்துக் கலைஞர். அவருடைய அந்த கலைப் பயணம் குறித்து உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்…
என் கோபம், நல்ல சிந்தனைகள் என அனைத்தும் அப்பா கொடுத்ததுதான். ” உன்னிடம் இருப்பது அனைத்தையும் கொடுத்து விடு” என்று வாழ்க்கை முழுக்க சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு என்னால் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும், அந்த எண்ணம் வரும்போது எல்லாம் அப்பாவின் நினைவு வந்துவிடும். அவர் பாடலாசிரியரும்கூட. தாய்வழி தாத்தா பச்சைமுத்து, அவரும் பெரிய ஆளுமை. எங்கள் குடும்பத்தில் அனைவரும் நடிப்போம் எங்கள் வீட்டில் ஐந்து அண்ணன் தம்பிகள் என்னைத் தவிர அனைவருமே தெருக்கூத்து கலைஞர்கள்தான்.
தெருக்கூத்தின் மரபுகள் குறித்த உரை பனுவல்கள் பற்றி சொன்னீர்கள்…உங்களுடைய காலகட்டத்தில் அதை எல்லாம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தது உண்டா?
எனக்கு அது அப்போது தோன்றவில்லை. இப்போதுதான் தோன்றுகிறது. கேரளாவில் என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அவர்களின் அடையாளம் கதகளி. கதைகளைத் தழுவி உருவான கதைதான் கதகளி.
வடமோடி தென்மோடி கூத்து மரபுகளை தமிழகத்தின் மிக முக்கியமான கூத்து மரபுகளாக கூறுகிறார்கள். அப்பா இதில் எந்த மரபைச் சேர்ந்தவர்?
அப்பா புராண கதைகளில் அதிகம் இருந்தார். அதில் ஆய்வுகள் ஏதும் பெரிதாக செய்யவில்லை. எங்கள் பகுதிகளில் அதிகமாக நடக்கின்ற கூத்து காத்தவராயன், திரௌபதி, அரிச்சந்திரன். இந்த மூன்றும் மிக முக்கியமானவை. அதில் அரிச்சந்திரன் கூத்து எப்படி காந்தியை மாற்றியதோ, அதே வேலையை பெரிய அளவில் அது எனக்கும் செய்திருக்கிறது. காத்தவராயன் ஆரியமாலா கதையும் மிகவும் நன்றாக இருக்கும். அதில் இல்லாத காதல் இல்லை. அதை மையமாக வைத்தே இன்னும் 100 படங்களுக்கு மேல் வரும். இதற்கு முன் வந்த படங்களும் அதை மையப்படுத்தி வந்ததுதான். தெருக்கூத்து என்பது தமிழர்களின் மிக முக்கியமான அடையாளம். குலதெய்வங்களை பார்த்தீர்கள் என்றால் அனைவரும் வேட்டி சட்டை போட்டா இருக்கிறார்கள். அனைவரும் கையில் வாளுடன் தலையில் கிரீடமும் வைத்துதான் இருக்கிறார்கள். அங்கு மட்டுமே வைத்துக்கொள்கிறோம்.அதற்கான வழிமுறைகளை அரசு எடுக்க வேண்டும்.
ஒரு பெரிய குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளை நீங்கள். சினிமா உங்களுக்கு எப்படி சாத்தியமானது? அப்பா மேடை கலாசாரத்தில் இருந்ததால், அதன் நீட்சியாக உருவானதா, இல்லை தனி ஆர்வமா?
சினிமாவில் எனக்கு மிகப்பெரிய விருப்பம் இருந்தது. நான் பார்த்த படங்களை வரிசைப்படுத்தி கொண்டே இருப்பேன். ஒரு ஐந்து படங்கள் வரை வரிசையாக நான் கூறுவேன். பெற்றால் தான் பிள்ளையா, பாசமலர், தனிப்பிறவி, தெய்வீக உறவு, இரவும் பகலும்.. பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஜிஆரின் ஒளியை நான் பார்த்தேன். அந்த கதை என்னை இழுத்துக்கொண்டு சென்றது. நான் உறைந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு ஆசையாக இருந்தது. அந்தப் படத்தை திரும்ப பார்க்க நான் விரும்பவில்லை. ஏனெனில் தற்போது அது எனக்கு பிடிக்காமல் போய்விட்டால் அது சரியானதாக இருக்காது. எனவே அப்போது நான் ரசித்தது ரசித்ததாகவே இருக்கட்டும். என் வயதிற்கு தமிழ்நாட்டில் அதிகமாக சினிமா பார்த்தது நானாக தான் இருந்திருப்பேன். வீட்டில் பணம் திருடிச்சென்று சினிமா பார்ப்பேன். அப்போது டிக்கெட் 30 பைசாவாக இருந்தது.