எத்தனை இசை வந்தாலும் அவை தமிழ் இசையாக இருக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எத்தனை இசை வந்தாலும், வளர்ந்தாலும் அவை தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்று முத்தமிழ் பேரவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் பேரவையின் 41-வது இசை விழா மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முத்தமிழ் பேரவை செயலர் பி.அமிர்தம் வரவேற்றார். அறக்கட்டளை தலைவர் ஜி.ராமானுஜம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை, பேரவையின் பொருளாளர் இ.வி.ராஜன், துணைத் தலைவர் குணா நிதி ஆகியோர் கவுரவித்தனர்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழ் பேரவை சார்பில், திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு ‘இயல் செல்வம்’ விருது, ராஜ்குமார் பாரதிக்கு ‘இசை செல்வம்’ விருது, ஷேக் மெஹபூப் சுபானி-காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கு ‘ராஜ ரத்னா’ விருது, நாட்யாச்சார்யா வி.பி.தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் ஆகியோருக்கு ‘நாட்டிய செல்வம்’ விருது, நாகேஷ் ஏ.பப்பநாடுவுக்கு ‘நாதஸ்வர செல்வம்’ விருது, திருராமேஸ்வரம் பா.ராதாகிருஷ்ணனுக்கு ‘தவில் செல்வம்’ விருது ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

முத்தமிழ் பேரவை என்பது 1975-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆலோசனைப்படி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக கொடிகட்டிபறந்த அனைத்து இசை மேதைகளும் பாடிய அரங்கமாகவும், பரிசுகளும், விருதுகளும் பெற்ற அரங்கமாகவும் இது திகழ்கிறது. இத்தகைய பெருமை மிக்க பேரவையின் 41-வது ஆண்டு விழாவில் விருதுகளை பெற்ற விருதாளர்கள் அனைவரையும் வாழ்த்தி, பாராட்டுகிறேன்.

தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஜெய் பீம்’

இளம் இயக்குநர் ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’ திரைப்படம் எனது மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படம் எனது மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. அப்படத்தை பார்த்துவிட்டு 2 நாட்கள் நான் தூங்கவில்லை. சிறைச்சாலை சித்ரவதையை நீங்கள் அந்த படத்தில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் உண்மையில் அனுபவித்தவன்.

இயல், இசை, நாடகம் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்த கலையாக இருக்க வேண்டும். கலைகளின் நோக்கம் மக்களை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இன்று இசையானது நாட்டுப்புற இசை, கர்னாடக இசை, மெல்லிசை, திரையிசை என பல பரிமாணங்களை அடைந்திருக்கிறது. எத்தனை இசை வந்தாலும், வளர்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும்.

1940-ம் ஆண்டு ராஜா அண்ணாமலை, தமிழிசை இயக்கத்தைத் தொடங்கினார். அப்போது மேடைகளில் பாடப்படும் பாடல்கள் சமஸ்கிருதம், தெலுங்கு பாடல்களாகத்தான் இருந்தன. தமிழ்நாட்டில் நடத்தப்படும் இசைக் கச்சேரிகளில் தமிழ் பாடல் பாட வேண்டாமா என கேட்டவர் தந்தை பெரியார்.

1943-ம் ஆண்டு முதன்முதலாக இசைக் கல்லூரியை தொடங்கினார் ராஜா அண்ணாமலை. இசை மன்றங்களையும் தொடங்கினார். தமிழிசை மாநாடுகளை நடத்தினார். தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் போன்ற பாடல்கள் தமிழ்நாட்டு மேடைகளில் ஒலித்தன. தமிழ்நாட்டில் எழுந்த தமிழ் இசை இயக்கத்துக்குத் துணையாக இருந்தது திராவிட இயக்கம்.

மூட நம்பிக்கையை விதைக்க கூடாது

மக்களுக்காகத்தான் கலைகள் இருக்க வேண்டும். மூட நம்பிக்கைகள் விதைக்கப்படக் கூடாது. முற்போக்கு எண்ணங்களை விதைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கலை, மனிதனின் சிந்தனைக் கதவுகளை திறப்பவையாக இருக்க வேண்டும். கலைகள் மனதுக்கு இதமானதாகவும், மானுடத்துக்குப் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி மிருதங்க கலைஞர் திருவாரூர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.