சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான மோக்கா என்கிற மோகன். இவரது நண்பர் ஷாமின் மனைவியின் பிறந்த நாள் விழாவுக்காக மோகன் நேற்று முன்தினம் புதுப்பேட்டை லெப்பை தெருவுக்கு சென்றுள்ளார். பின்னர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, இரண்டு நபர்கள் கையில் இரும்புத் தடியுடன், ஷாம் குறித்து விசாரித்து சென்றதாக அங்கிருந்த நபர்கள் மோகனிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபர்களைத் தேடி, மோகன் புதுப்பேட்டை சென்றுள்ளார். அப்போது, மோகனுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அய்யாசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் மோகன் ஒளிந்த நிலையில், அவரை தேடிவந்த நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக மோகன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM