சென்னை: தமிழகத்திற்கு ஓராண்டில் 177 டி.எம்.சி.,க்கு பதிலாக, 281 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் மாதங்களில், அதிக நீரை வழங்கும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம், நீரின் அளவை நிர்ணயம் செய்துள்ளது.கர்நாடகாவில், 2021ல் தென்மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது.
அங்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், அதிகளவில் நீர் திறக்கப்பட்டது.பருவ மழை முடிந்த பின்னும், இந்த ஆண்டு ஜன., முதல் மே வரை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதல் நீர், தமிழகத்திற்கு கிடைத்தது.
இதன் வாயிலாக, 2021- 22ம் ஆண்டுக்கான நீர் வழங்கும் காலத்தில், 177.25 டி.எம்.சி.,க்கு பதிலாக, 281 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்த அளவை விட, 103.8 டி.எம்.சி., நீர் கூடுதலாக, தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
Advertisement