சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படம் வசூலில் சாதனை படைத்ததையொட்டி நேற்று மாலை அதன் வெற்றிவிழா நடந்தது. நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி உள்பட படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு பேசினார். கமலின் ‘விக்ரம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்புகளாலும் மகிழ்ந்திருக்கும் அவர் லைகா தயாரிப்பில் நீண்ட மாதங்களாக படப்பிடிப்புத் தொடங்காமல் இருக்கும் கமலின் ‘இந்தியன் – 2’ படத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் சுபாஷ்கரனிடம் பேசியிருக்கிறார். இது குறித்தும் விழாவில் ஹின்ட் கொடுத்திருக்கிறார் உதய். விழாவில் அவர் பேசியதிலிருந்து..
”சிவாவின் முந்தைய படம் ‘டாக்டர்’ படத்தை ‘டான்’ ஓவர் டேக் பண்ணும்னு முன்னாடியே சொல்லியிருந்தேன். அது நடந்திருச்சு. இந்தப் படம் முதல்ல கதை கேட்டு, இதை வேணாம்னு மறுத்த ஹீரோ யார் தெரியுமா? நானே தான். ஆனா, இயக்குநர் சிபி, நீங்க தப்பிச்சிட்டீங்க… கதை எனக்கு பிடிச்சிருந்துச்சு. ஆனா, அந்த ஸ்கூல் போர்ஷ்ன் என்னால பண்ணமுடியாது. நல்ல வேளை பண்ணல. இதை சிவா பண்ணினதாலதான் ஓடியிருக்கு. யார் யார் கரெக்ட்டா எதைப் பண்ணனுமோ அவஙகளுக்கு அது கரெக்ட்டா போய் அமைஞ்சிருக்கு. அதிலும் இந்த ஸ்கூல் போர்ஷன் சிவா பண்ணினது மாதிரி சத்தியமா என்னால பண்ணியிருக்கவே முடியாது. அதைப்போல க்ளைமாக்ஸ்ல வர்ற அப்பா, மகன் எமோஷன் எல்லாம் எனக்கு சுத்தமா வந்திருக்கவே வந்திருக்காது. யார் யார்கிட்ட போய் சேர்ந்திருக்கணுமோ அது சேர்ந்திருக்கு.
அடுத்து லைகா தமிழ்குமரன், ‘பொன்னியின் செல்வன்’ ரெடியாகிடுச்சு. எப்போ பார்க்குறீங்கனு கேட்டிருக்கார். அனிருத்துக்கும் வாழ்த்துகள். சிவாவும், அனியும் இணைந்து 200 கோடி க்ளப்பை தொடணும்னு வாழ்த்துறேன். கண்டிப்பா தொடுவீங்க. சுபாஷ்கரன் சார்கிட்ட பேசிட்டிருக்கோம். ‘இந்தியன்-2’வை ஆரம்பிக்கப் போறோம்.”