புதுடெல்லி: பார்வையற்றோரும் அறியும் வகையில் சிறப்பு நாணயங்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் சிறப்பு அடையாள வாரம் கொண்டாடப்படுகிறது. இதை டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நாணயங்களை பார்வையற்றோரும் அடையாளம் தெரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் அடைந்ததன் 75-வது ஆண்டு விழா முத்திரையுடன் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், மக்களுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் 12 திட்டங்கள் பற்றிய ‘ஜன சமர்த்’ என்ற பெயரிலான இணையதளத்தையும் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டங்களின் கீழ் பயனடையும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் சந்தேகங்களுக்கு உதவும் வகையிலும் பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் இந்த இணையதளம் இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இப்போது வெளிடப்பட்டுள்ள புதிய நாணயங்கள் நாட்டின் சுதந்திரத்தின் பெருமையை நினைவூட்டி நாம் அடைய வேண்டிய இலக்குகளுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் உழைக்க மக்களை ஊக்குவிக்கும். இந்தியாவின் வங்கிகள் மற்றும் ரூபாயை சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியின் முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும். நமது உள்நாட்டு வங்கிகள், ரூபாயை சர்வதேச விநியோகச் சங்கிலி மற்றும் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாக மாற்றுவது எப்படி என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.
நிதிநிலையை உள்ளடக்கிய பல்வேறு தளங்களை இந்தியா உருவாக்கியிருக்கிறது. அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த நிதித் தீர்வுகளை உலகளாவிய அளவில் விரிவுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
மக்களை மையப்படுத்திய நிர்வாகமும் நல்லாட்சிக்கான தொடர்ச்சியான முயற்சியிலும் தனிச்சிறப்புடன் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் இந்த முயற்சியால் ஏழைகளுக்கு நிரந்தரக் குடியிருப்பு, மின்சாரம், எரிவாயு, குடிநீர், இலவச மருத்துவம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.