உக்ரைன் போர் துவங்கியபோது, அது இரு நாடுகளுக்கிடையிலான ஒரு பிரச்சினையாக பார்க்கப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை, தற்போது கண்கூடாக பார்க்கமுடிகிறது.
உதாரணமாக, பலரும் எதிர்பாராத வகையில், உலகம் முழுவதும் உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உரம் என வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான பல விடயங்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் ஒரு நிலை உருவாகியுள்ளதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.
மற்றொரு பக்கம், எரிவாயு முதலான விடயங்களின் விலை உயர்வு, பல்வேறு வகையிலான தாக்கங்களை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், மற்றொரு புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.
அது என்னவென்றால், ரஷ்ய எரிவாயுவைத் தடை செய்ததால், மருத்துவக் கழிவுகள் முதலான கழிவுப்பொருட்களை எரிக்க உதவும் இன்சினரேட்டர் என்னும் கருவுகளிலிருந்து வெளியாகும் மோசமான வாயுக்களை குறைக்க உதவும் ரசாயனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அப்படி அந்த ரசாயனங்கள் கிடைக்காத ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில், சட்டப்படி வெளியிடப்படும் பாதகமான வாயுக்களின் அளவு அதிகரிக்கும் நிலை உருவாகும். அப்படி அபாய அளவுக்கு வாயுக்கள் வெளியாகுமானால், அந்த கழிவுகளை எரிக்கும் மையங்களையே மூடவேண்டியதுதான்…
இதனால் உருவாக இருக்கும் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், எரிக்கப்படாத கழிவுப்பொருட்கள் மலை போல் குவிந்துவிடும்.
ஆக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல், வெறும் உக்ரைன் மீதான போர் இல்லை, அது மொத்த மனுக்குலத்தின் மீதான போரும் என்பதால், போரை முடிவுக்குக் கொண்டு வர ஏதாகிலும் நடவடிக்கை எடுப்பதே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!