புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய கலவரம் நடைபெறவில்லை என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆனால் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் இருந்து நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது மிகவும் துயரமானது.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே கரோனா உயிரிழப்பு அதிகரித்தது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் அந்த நாட்டின் மண் வளம் குறைந்திருக்கிறது. மண் வளத்தை அதிகரித்து, ஊட்டச்சத்தான தானியங்களை விளைவித்து உட்கொண்டால், எந்தவொரு நோயையும் எதிர்கொள்ளும் திறனை மனித உடல் பெறும்.
இந்தியாவில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த காலத்தில் நமது முன்னோர்கள் மண் வளத்தைப் பாதுகாத்தனர். ஆனால் கடந்த 45 ஆண்டுகளில் இந்தியாவின் மண் வளம் அழிக்கப்பட்டிருக்கிறது. இதை மீட்டெடுக்க வேண்டும். ரசாயன நடைமுறையில் இருந்து இயற்கை வேளாண்மைக்கு விவசாயிகள் படிப்படியாக மாறவேண்டும்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. மன நலனுக்கும் வன்முறைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் வன்முறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது மோசமான சூழலை உருவாக்கும்.
என்னுடைய கல்லூரி பருவத்தில் இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்கள் நடைபெற்றன. கடந்த 25 ஆண்டுகளாக நாட்டில் கலவரங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய கலவரம் நடைபெறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலவரங்கள் மிகைபடுத்தி கூறப்படுகின்றன.
அனைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழ விரும்புகின்றனர். குழந்தைகளை படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் சிலர் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். அவர்களை சட்டம் கட்டுப்படுத்தும்.
அமெரிக்க தேர்தல் நடைமுறையின் மீது அந்த நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. இந்திய தேர்தல் நடைமுறையை அவர்கள் பாராட்டுகின்றனர். கடந்த காலங்களைவிட இப்போது சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.