கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.
சைவ திருத்தலங்களில் முதன்மை பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். இக்கோயிலிலுள்ள கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனைக் கண்டித்து பக்தர்கள் தெய்வத்தமிழ் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து தமிழக அரசு கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்துசமய அறநிலையத் துறையினர் நடராஜர் கோயில் வரவு செலவு கணக்கு மற்றும் நகைகள் உள்ளிட்ட கோயிலின் சொத்துக்களை ஆய்வுசெய்ய இருப்பதாக இந்துசமய அறநிலையத் துறையில் இருந்து கோயிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் நேற்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோயில் பொது தீட்சிதர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது அவர்கள் கருத்தைக் கேட்ட அமைச்சர் ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று காலை (ஜூன் 7) இந்துசமய அறநிலையத்துறை வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் இணை ஆணையர்கள் பழனி நடராஜன், வேலூர் லக்ஷ்மணன், கடலூர் அசோக்குமார், கடலூர் துணை ஆணையரும் ஒருங்கிணைப்பாளருமான ஜோதி, ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பின்னர் தீட்சிதர்கள் அதிகாரிகள் குழுவை தேவ சபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் தீட்சிதர்கள் ஒரு மனுவை அதிகாரிகளிடம் அளித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கோயில் நிர்வாகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களது மூதாதையர் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் செய்து நிர்வகித்து வருகின்றனர் என்று கூறி கணக்கு காட்ட மறுத்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் குழு கோயில் வளாகத்தில் அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்து அறநிலையத்துறை அதிகாரி குழுவினர் சிதம்பரத்தில் தங்கியிருந்து உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று நாளை (ஜூன் 8) மீண்டும் கோயிலுக்கு ஆய்வுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.