புதுடில்லி : முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், இந்தியா மீது முஸ்லிம் நாடுகளின் அமைப்பான, ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறிய கருத்துக்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேவையில்லாமல் மத ரீதியில் பிரச்னையை உருவாக்குவதாக அந்த அமைப்புக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளரான நுாபுர் சர்மா, சமீபத்தில் ஒரு ‘டிவி’ சேனல் நடத்திய விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பான கருத்தை, கட்சியின் டில்லி ஊடகப் பிரிவைச் சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால், சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பல இடங்களில் கலவரம் மூண்டது. இதையடுத்து, நுாபுர் சர்மாவை, ‘சஸ்பெண்ட்’ செய்தும், நவீன் குமார் ஜிண்டாலை கட்சியில் இருந்து நீக்கியும் பா.ஜ., நடவடிக்கைஎடுத்தது.மேலும், இது தொடர்பாக ஒரு விளக்க அறிக்கையையும் பா.ஜ., வெளியிட்டது.’பா.ஜ., அனைத்து மதங்களையும், அவற்றின் நம்பிக்கையையும் மதிக்கிறது. மதம் சார்ந்தவர்களை அவதுாறாக பேசுவதை ஏற்க முடியாது. மதத்தை பற்றி அவதுாறாக பேசுவோரை, பா.ஜ., ஒருபோதும் ஊக்குவிக்காது’ என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மேற்காசிய நாடுகளான கத்தார், குவைத், ஈரான் ஆகியவை இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.அந்த நாடுகளில் உள்ள இந்தியத் துாதர்களை அழைத்தும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்தன.அப்போது, ‘தனிப்பட்ட நபர்கள் பேசியதை, ஒரு நாட்டின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும், இதில் மத்தியில் ஆளும் பா.ஜ., நடவடிக்கை எடுத்ததுடன், விளக்கமும் கொடுத்துள்ளது’ என, இந்திய துாதர்கள் பதில் அளித்துள்ளனர்.
இந்நிலையில், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான, ஓ.ஐ.சி., எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டது. மேலும், இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, ஐ.நா., சபையையும் அது வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்று கூறியுள்ளதாவது :
இந்த விவகாரத்தில், ஓ.ஐ.சி., செயலகம் குறுகிய நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா எப்போதும் அனைத்து மதங்களையும் மதிக்கும் நாடு.ஒரு சில தனிப்பட்ட நபர்கள், சமூக வலைதளத்திலும், சில நிகழ்ச்சிகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். அதை, இந்திய அரசின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது.அந்த தனிப்பட்ட நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஓ.ஐ.சி., அமைப்பு உள்நோக்கத்துடன், குறுகிய நோக்கத்துடன், தவறான, பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளது.இதில் இருந்து, ஒரு சிலரின் துாண்டுதலால், ஒரு சிலரின் குறுகிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ஓ.ஐ.சி., அமைப்பு செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. இது போன்று மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருத்துக்களை வெளியிடுவதை, ஓ.ஐ.சி., அமைப்பு நிறுத்த வேண்டும். அனைத்து மதங்கள், அனைத்து நம்பிக்கைகளையும் மதிக்க, ஓ.ஐ.சி.,யில் உள்ள நாடுகள் கற்றுக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தப் பிரச்னை குறித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருந்தார்.மேலும், பாகிஸ்தானுக்கான இந்தியத் துாதரக சிறப்பு அதிகாரியை நேரில் அழைத்து, தங்களுடைய எதிர்ப்பை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளித்து, அரிந்தம் பக்சி கூறியுள்ளதாவது:
தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஒரு நாடு, சிறு பான்மையினர் உரிமை குறித்து பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. இந்திய அரசு அனைத்து மதங்களையும் மதிக்கிறது. ஆனால், மத வெறியர்களுக்கு புகழாரம் சூட்டி, அவர்களுக்கு நினைவிடம் கட்டும் பாகிஸ்தானில் இது போன்று பார்க்க முடியாது.முதலில் தங்களுடைய நாட்டில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கட்டும். இந்தியா மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கு பதிவு
பா.ஜ.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நுாபுர் சர்மா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் டில்லி போலீஸ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நுாபுர் சர்மாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளோர் குறித்த விசாரணை துவங்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் நீக்கம்
இந்த சர்ச்சை எழுந்தவுடன், பல்வேறு நாடுகளில், இந்தியப் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தப் போவதாக, சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டிருந்தனர்.இந்நிலையில், குவைத்தின் புறநகரில் உள்ள அல் – அர்தியா கூட்டுறவு சொசைட்டி வணிக வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டீ மற்றும் மசாலா பொருட்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.