‘ஜென்டில்மேன் 2’ படத்தின் இயக்குநர் அறிவிப்பு – வெளியான தகவல்

‘ஜென்டில்மேன் 2’ படத்தினை கோகுல் கிருஷ்ணா இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கே.டி. குஞ்சுமோனின் தயாரிப்பில், அர்ஜுன், கவுண்டமனி, செந்தில், மதுபாலா, சரண்ராஜ், வினீத், மறைந்த நம்பியார், மனோரமா ஆகியோர் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில், அரசியலை மையமாக வைத்து உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.

அறிமுகப் படம் என்றே தெரியாத அளவில் மிக அழகாக கதைக்களத்தை கையாண்டிருப்பார் இயக்குநர் ஷங்கர். தற்போது பல படங்களின் சீக்குவல், ஏன் இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன்’ படத்தின் 2-ம் பாகமே தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், ஜென்டில்மேன் 2 படம் எப்போது தயாரிக்கப்படும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘ஜென்டில்மேன் 2’ படம் குறித்த அறிவிப்பை கே.டி.குஞ்சுமோன் வெளியிட்டார். எனினும், படத்தின் இயக்குநர், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிக்கவில்லை.

image

அதன்பின்னர், படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் நாயகிகளாக நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து படத்தை யார் இயக்குவார் என எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில், படத்தின் இயக்குநரை கே.டி. குஞ்சுமோன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு நானி, வானி கபூர் நடிப்பில் வெளியான ‘ஆஹா கல்யாணம்’ படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா ‘ஜென்டில்மேன் 2’ படத்தை இயக்கவுள்ளார். இவர், விஷ்ணுவர்தனிடம் அசோசியட்டாக பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் கோகுல் கிருஷ்ணா கூறுகையில், “ஸ்கிரிப்ட் விவரங்களைப் பற்றி தற்போதே கூறுவது நன்றாக இருக்காது. கதை விவாதத்தில் ஏற்கெனவே ஒரு தனிக் குழு பணியாற்றி வருகிறது. தற்போது பதட்டமாக உணருவதைவிட, இந்தப் படத்தை முழு பொறுப்புடன் முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும், படத்தின் கதாநாயகன் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.