முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்களுக்கு, இதுவரை, 15 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
தோஹா, முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள், பாஜக தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக மேற்கண்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. இது குறித்து விளக்கம் அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதாகவும், தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அரசு திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும், புண்படுத்தும் ட்வீட்கள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன என்றும், அவை எந்த வகையிலும் மத்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், பாஜக தலைவர்கள் நுபுர் சர்மா, நவீண் குமார் ஜிண்டால் ஆகியோருக்கு, இதுவரை 15 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளன. பாஜக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் வேதனைத் தெரிவித்து உள்ளனர்.