நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக போலீஸில் புகார் கூறிய நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நூபுர் சர்மா கொடுத்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
என்ன பேசினார்? பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.
அதனையடுத்து தொழிலதிபர் நவீன் குமார் ஜிண்டாலும் அதேபோன்றதொரு சர்ச்சைக் கருத்தை ட்விட்டரில் வெளியிட்டு பின்னர் நீக்கினர். இந்த இரண்டு விஷயங்களையும் கண்டித்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கண்டன ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலம் கல்வீசு வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டனர்.
போலீஸில் புகார்: இந்நிலையில் அவர் நேற்று தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து இன்று அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஜிசிசி நாடுகளான குவைத், கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், யுஏஇ.,யுடன் இந்தியா கடந்த 2020-21 காலகட்டத்தில் 90 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. ஜிசிசி நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கின்றனர். வசிக்கின்றனர்.
பிரதமரமாக பதவியேற்ற பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் மோடி இந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக் கருத்துகளால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.