புதுக்கோட்டை செல்வதற்காக இன்று நண்பகல் விமானம் மூலம் திருச்சி வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாஜகவின் 8 ஆண்டுகள் குறித்து விமர்சித்து பேசினார்.
இன்று மாலை திருச்சி புத்தூர் அருகே பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு;
மதிமுகவின் மூத்த நிர்வாகி சேதுமாதவன் மறைவையடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் இன்று நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
விமான நிலையத்தில் திருச்சி மதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது; கழகத்திற்கு ஏதாவது சோதனை என்று சொன்னால் எழுச்சி தானாக வரும், அப்படி எழுச்சி இயற்கையாக தானாக ஏற்பட்டிருக்கிறது. தோழர்களுடைய உணர்ச்சி தான் காரணம், உணர்வுகள் அடிப்படையில், லட்சியங்கள் அடிப்படையில், கொள்கையின் அடிப்படையில் உண்டான இயக்கம் என்பதால் அந்த உணர்வு கொஞ்சம் கூட மங்காமல், மறையாமல் உறுதியாக இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பது போல தெரியவில்லை, ஆளும்கட்சி செல்வாக்கோடு மக்களின் பேராதரவோடு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் திட்டங்கள் அறிவித்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் பொற்காலம் ஆகும்.
திராவிட இயக்கக் கொள்கைகளை கடைபிடிப்பதில் கொஞ்சம் கூட திமுக சமரசம் இல்லாமல் இருக்கிறது.
பாஜகவின் எட்டாண்டு ஆட்சியும் திமுகவின் ஓராண்டு ஆட்சியும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாக பார்க்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சி மலை என்று சொன்னால், எட்டாண்டு கால பிஜேபி ஆட்சி மடு என்றுதான் கூறவேண்டும்.
திமுகவை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குறை கூறி வருவது என்பது அவரது வேலை. பாஜகவின் தலைவராக இருப்பதால் ஆளும் கட்சி குறித்து ஏதாவது ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார் என வைகோ தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மதிமுக நிர்வாகிகள் மருத்துவர் ரொகையா பேகம், சேரன் உட்பட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வைகோவை உற்சாகமாக வரவேற்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“