`நாட்டிய செல்வம்' விருது; பாராட்டிய முதல்வர், நெகிழும் சாந்தா – தனஞ்ஜெயன் தம்பதி!

முத்தமிழ் பேரவையின் 41-வது இசை விழா மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பேசிய முதல்வர், “வி.பி.தனஞ்ஜெயன் அவர்களுக்கும், அவருடைய மனைவி சாந்தா தனஞ்ஜெயன் அவர்களுக்கும் நாட்டிய செல்வம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் நாட்டிய இணையர்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற நாட்டிய இணையர்களாக விளங்கிக்கொண்டிருக்கக்கூடியவர்கள். மூன்று வயதில் இருந்தே நாட்டியம் ஆடிய கால்கள் அவருடைய கால்கள். உலகப்புகழ் பெற்ற ருக்மணி அருண்டேல் அவர்களிடம் நாட்டியம் கற்றவர்.

சாந்தா தனஞ்ஜெயன்- தனஞ்ஜெயன்

அடையாறில் பரத கலாஞ்சலி என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை உருவாக்கி, தன்னைப் போலவே பல கலைஞர்களை தனஞ்ஜெயனும், சாந்தா அவர்களும் உருவாக்கி வருகிறார்கள். அத்தகைய நாட்டிய இணையர்கள் இருவரையும் முத்தமிழ்ப் பேரவை பாரட்டுகிற அதே நேரத்தில் நானும் அவர்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

இந்த விழாவில் ‘நாட்டிய செல்வம்’ விருது பெற்ற வி.பி.தனஞ்ஜெயன் – சாந்தா தனஞ்செயன் தம்பதியரிடம் பேசினோம். “தமிழக அரசின் சார்பில் இந்த விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கலைத்துறையில் எங்களுக்கான அங்கீகாரம் குறித்து பெருமைப்படுகிறோம். 1985-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றேன். 1995-ம் ஆண்டு ஜெயலலிதா அவர்களிடம் என் மனைவி சாந்தா, கலைமாமணி விருது பெற்றார்.

நேற்று கலைஞரின் மகன் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் இருவரும் சேர்ந்து இந்த விருதினைப் பெற்றது சிறப்பான விஷயம். இந்த விழாவில் ஜூனியர்களுடன் சேர்ந்து சீனியர்களையும் கெளரவித்தது பெருமைப்பட வேண்டிய விஷயம். தமிழக அரசுக்கு நன்றி” என்றார் தனஞ்ஜெயன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.