சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர்: மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா குடும்பத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் பிரபல பாடகரான சித்து மூஸ்வாலா இணைந்தார். 28 வயதான மூஸ்வாலா, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் விஜய் சிங்லாவை எதிர்த்து போட்டியிட்டு 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து அண்மையில் மூஸ்வாலா வெளியிட்ட பாடலில், ஆம் ஆத்மி கட்சியினரையும், அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து பாடல் வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் இவருக்கு எதிராக கருத்துகள் பதிவிடப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் விஐபி கலாச்சாரத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில், சித்து மூஸ்வாலா உட்பட 424 பேருக்கு அளித்து வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு கடந்த 24ம் தேதி திரும்ப பெற்றது. அன்றைய தினமே மர்ம நபர்களால் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரி சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறுகையில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ-விடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவரது மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டபோது வெளிநாட்டு பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் இன்று பஞ்சாபின் மாசா மாவட்டத்தில் உள்ள சித்து மூஸ்வாலா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.